கூட்டணியில் நீடிக்கும் குழப்பம்:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கும் என பெரும் குழப்பம் நிலவியது. பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும் என, பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி தெரிவிக்க, மறுநாளே ஈபிஎஸ் அணி வேட்பாளரை அறிவித்தது. அப்போது தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டு இருந்த பேனரில் , தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பாஜக தலைமையிலான கூட்டணியின் பெயருக்கு பதிலாக, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் பாஜக - ஈபிஎஸ் தரப்பு கூட்டணி முறிவடைந்ததோ என்ற கேள்வி எழுந்தது. அதேநேரம், ஓபிஎஸ்-ம் தனது தரப்பு வேட்பாளரை அறிவித்தார். ஆனாலும், ஒருவேளை பாஜக போட்டியிட்டால், அக்கட்சிக்கு ஆதரவாக தனது வேட்பாளரை திரும்பப் பெறுவேன் என்றும் கூறியிருந்தார்.
ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ தனித்தனியாக சந்தித்த அண்ணாமலை
இந்நிலையில் டெல்லி சென்று திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை அவரவர் இல்லங்களில் தனித்தனியாக சந்தித்தார். அப்போது, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
7ம் தேதி வரை காத்திருங்கள் - சி.டி. ரவி, அண்ணாமலை
அதைதொடர்ந்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சி.டி. ரவி மற்றும் அண்ணாமாலை ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ”ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பை சேர்ந்து பணியாற்ற வலியுறுத்தினோம். திமுகவை வீழ்த்தவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் ஒருங்கிணைந்த அதிமுக அவசியம், எனவே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-ஐ ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம். நாங்கள் தற்போது வரை அதிமுக உடன் தான் இருக்கிறோம். வேட்புமனுதாக்கல் செய்ய பிப்ரவரி 7ம் தேதி வரை அவகாசம் உள்ளதால், எங்கள் நிலைப்பாட்டை பின்பு அறிவிப்போம். வலுவான நிலையான வேட்பாளர் வேண்டும் என்பதே தற்போதைக்கு எங்கள் நிலைப்பாடு ” என சி.டி. ரவி தெரிவித்தார்.
தொடரும் குழப்பம்:
அதிமுகவில் ஒ.பன்னீர்செல்வத்திற்கு இனி இடமே இல்லை என ஈபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்த்து வருகிறது. இரட்டை இலை சின்னமே இல்லாவிட்டலும், ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்க அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும், இரட்டை சிலை சின்னத்தை முடக்க நான் காரணமாக இருக்கமாட்டேன், முன்பு போலவே சேர்ந்து செயல்பட தயார் என, ஓபிஎஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.
அதிமுகவில் தலையிடும் பாஜக:
இந்நிலையில் தான், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, இடைதேர்தலை சந்திக்கவே விரும்புவதாக பாஜக தெரிவித்துள்ளது. அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட்டதில்லை என ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், இன்று அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக முயல்கிறது என, அண்ணாமலையே வெளிப்படையாக பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.