சிலரை செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா என, மின் கட்டண உயர்வு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.






மின் கட்டணத்தில் மாற்றம்:


தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் உயர்வதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 ரூபாய் மின் கட்டணம் உயர்வதாகவும், 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2 மாதங்களுக்கு 147.50 ரூபாய் கட்டணம் உயர்த்த பரிசீலிக்கப்படுவதாகவும், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 298.50 கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 42 விழுக்காடு வீடு மற்றும் குடிசைகளுக்கான மொத்தக் கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றும் விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். 


நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று நுகர்வோரே எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும்,ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்புத் திட்டம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.






அண்ணாமலை குற்றச்சாட்டு:


மின் கட்டணத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளதாவது, பல சாக்கு போக்குகளை கூறி, மின் கட்டணத்தை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உயர்த்தியுள்ளார். சிலரை பணக்காரர்களாக ஆக்குவதற்காக, மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கி தவிக்கிறது என்றும் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


முன்னதாக மின் கட்டண உயர்வுக்கு அமமுவின் டிடிவி தினகரனும் அரசை கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.