தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளின் ஒன்றாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருகிறது. இந்தநிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி ராமதாஸ் தலைவர் பதிவிலிருந்து நீக்கப்படுவதாக, அதன் நிறுவனர் ராமதாஸ் திடீரென அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமதாஸின் இந்த திடீர் முடிவுக்கு பின்னணியில், பல்வேறு காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பிரச்சனை என்ன என்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரங்களில் விசாரித்தோம்.
சீல் வைக்கப்பட்ட கவரை கொண்டு வந்தது யார் ?
வழக்கமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில், வியாழக்கிழமை தோறும் பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருவார். அதன் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல் பத்திரிகையாளர் சந்திப்பானது நடைபெற்றது.
வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பு என்பதால், பத்திரிகையாளர்களும் பரபரப்பு இல்லாமல் வழக்கமான கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தனர். பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் நேரத்தில் திடீரென ஒரு சீல் வைக்கப்பட்ட கவரிலிருந்து, பேப்பர் எடுத்து வாசித்தார். அதில் தான் அன்புமணி ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு இருந்தது.
பின்னணியில் இருந்தவர்கள் யார் ?
இதுகுறித்து பாட்டாளி கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, இதை கம்ப்யூட்டரில் டைப் செய்து, ஜெராக்ஸ் எடுத்துக் கொடுப்பது என்பது மிகப்பெரிய பணி. இந்தப் பணியை யாரும் தைலாபுரத் தோட்டத்து, பணியாளர்கள் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் முன்கூட்டியே இந்த தகவல் வெளியாகி இருக்கும். எங்கள் கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இதுகுறித்து தகவல் தெரிந்திருக்கும். இந்த செய்தி வெளி வராமல் தடுத்திருக்க முடியும்.
ஆனால் இதை கட்சிக்கும், வன்னியர் சங்கத்திற்கும் சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் ஒருவர் செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர்தான் B-டீமாக செயல்பட்டு தலைவருக்கு கெட்ட பெயர் வாங்கி தர வேண்டும் என இவ்வாறு செய்து கொண்டிருக்கிறார். கட்சி நிறுவனருக்கு சிறிது காலமாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லை, அதை அந்த மூன்றாவது நபர் சரியாக பயன்படுத்திக் கொண்டு இது போன்ற காய்களை நகத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த நிர்வாகிகளின் சதிவலை ?
இது மட்டுமில்லாமல் இதன் பின்னணியில், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வன்னியர் சங்கத் தலைவர் ஆகிய இருவரும் இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மூன்றாவது நபருக்கு கை பாவையாகவும், அன்புமணிக்கு அதிக அளவு முக்கியத்துவம் கட்சியில் கிடைப்பதால், பொறாமையிலும் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சி நிகழ்ச்சிகளில், அவர்களுடைய புகைப்படத்தை பெரியதாக போட வேண்டும் என அவர்கள் விரும்புவதாகவும் தெரிகிறது.
இது குறித்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி நம்மிடம் பேசுகையில், மாநாடு அழைப்பிதழ் பத்திரிக்கையை, மாநாட்டுக்குழு தலைவர் என்ற முறையில் அன்புமணி ராமதாஸ் ஏற்பாடு செய்திருந்தார். அதில் மருத்துவர் ராமதாஸ் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அன்புமணியின் படம் கூட அதில் இடம்பெறவில்லை.
ஆனால் அந்த அழைப்பிதழில் தங்கள் படம் இடம்பெற வேண்டும் என, சில விளம்பர பிரியர்கள் மருத்துவரிடம், இல்லாதது , பொல்லாததை கூறி, அவர் மனதை கலைத்துள்ளனர் என தெரிவிக்கின்றனர் பாமகவினர். இந்த பிரச்சனை சரியாகிவிடும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.