தமிழ்நாட்டின் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல்பறந்து வருகிறது. தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றும், வட தமிழ்நாட்டின் அதிகளவு வாக்கு வங்கி வைத்துள்ள கட்சிகளில் ஒன்றான பாமக-வில் நடக்கும் உட்கட்சி மோதல் அந்த கட்சியின் அடிமட்ட தாெண்டர்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது.

பாமக பஞ்சாயத்து:

குடும்ப அரசியலுக்கு எதிராக மிகப்பெரிய பரப்புரையை மேற்கொண்ட ராமதாஸின் பாமக இன்று குடும்ப அரசியலாலே சிதைந்து வருகிறது என்றே அந்த கட்சியின் நிர்வாகிகளும் கவலையில் உள்ளனர். தந்தை ராமதாசிற்கும், மகன் அன்புமணிக்கும் நடக்கும் மோதலை பலரும் முடிவுக்கு கொண்டுவர முயற்சி காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், ராமதாஸ் இல்லாத சமயத்தில் தைலாபுரம் சென்ற அன்புமணி தனது தாய் சரஸ்வதி அம்மாளைச் சந்தித்தபோதும், சென்னை வந்த சரஸ்வதி அம்மாள் பனையூர் சென்று தனது மகன் அன்புமணியைச் சந்தித்தபோதும் என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

கண்ணீர் விட்ட அன்புமணி:

கடந்த 10ம் தேதி தைலாவரம் சென்றிருந்த அன்புமணி தனது தாய் சரஸ்வதி அம்மாளைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, ராமதாஸ் எனும் பெயரையே நான் போட்டுக்கக்கூடாதுனு அப்பா சொல்றாரும்மா என்று வேதனையில் சரஸ்வதி அம்மாளிடம் கூறி அழுதுள்ளார். அதன்பின்பு, பனையூரில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தியின் மகன் திருமண நிச்சயதார்த்த விழாவிற்காக ராமதாசுடன் சென்னை வந்த சரஸ்வதி அம்மாள், பனையூரில் உள்ள தனது மகன் அன்புமணியின் வீட்டிற்கு தனியாக சென்று அவரையும், அவரது குடும்பத்தையும் சந்தித்தார்.

பனையூரில் சரஸ்வதி அம்மாள்:

தனது தாய் வந்ததால் மனம் பூரிப்படைந்த அன்புமணியும், அவரது மனைவி செளமியா ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது முதலே இதற்கு காரணம் செளமியா அன்புமணிதான் காரணம் என்று சில குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 

அன்புமணி ராமதாஸ் அப்போது தனது தாயிடம், எனக்கு தலைமைப் பண்பு சுத்தமா இல்லனு சொல்றாரு. அவர்தான் என்னை தலைவரா நியமிச்சாரு. இப்போ, அவரே என்னை வெளிய போகச்சொன்னா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க.  என் அரசியல் வாழ்க்கையையே முடிக்கப்பாக்குறாரா? என்று கண்கலங்கியுள்ளார்.

ஆதங்கப்பட்ட செளமியா:

வீட்டிற்கு வந்த சரஸ்வதி அம்மாளிடம், இந்த குடும்பத்தை நான் பிரிச்சுட்டேனு சொல்றாங்க அத்தை. அப்பாவுக்கும் மகனுக்கும் நான் சண்டையை மூட்டி விட்றாங்கனு சொல்றாங்க. மாமாவே எல்லாத்தையும் பாத்துக்கட்டும். எனக்கு எந்த அரசியல் ஆசையும் கிடையாது.  என் மேல பழியை போட்றது நியாயமா? என்று செளமியா அன்புமணி கண்ணீர்விட்டு சரஸ்வதி அம்மாளிடம் அழுதுள்ளார். 

தனது கணவன் - மகன் இடையே நடக்கும் போராட்டத்தை கண்ட சரஸ்வதி அம்மாளும் மனம் கலங்கியுள்ளார். அவர் அப்போது அன்புமணியிடம் ராமதாசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இந்த ஒரு தேர்தல் மட்டும் தந்தை ராமதாஸ் சொல்வதை கேட்டு நடக்கும்படியும் அன்புமணிக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், அன்புமணியை மீண்டும் தலைவராக மாற்றுவதற்கு ராமதாசிடம் பேசுவதாகவும் ஆறுதல் கூறி அங்கிருந்து கிளம்பியுள்ளார். 

இந்த சூழலில், ராமதாஸ்- அன்புமணி இணக்கமாகிவிட்டால் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் நடக்கும் வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் ராமதாசுடன் இணைந்து அன்புமணியும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கலாம்.