தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க.வை பலப்படுத்த பணியில் அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக. கடந்த 4-ந் தேதிக்கு பிறகு பல புதிய மாவட்ச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பா.ம.க.வின் கொள்கைகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று விளக்கமாக எடுத்துக்கூற வேண்டும் என்று ஏற்கனவே அக்கட்சி தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.


மேலும், மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து கட்சி அமைப்பு ரீதியான ஒன்றியங்களில் இரு சக்கர வாகன ஊர்தி பேரணி நடத்த வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,


பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்.  அவர்களின் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களுக்கு கடந்த 4-ஆம் தேதி கடிதம் எழுதி இருந்தேன். ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் தனித்தனியாக அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தேன்.




கடிதத்தை பெற்ற மாவட்ட செயலாளர்களில் சிலர், அந்தக் கடிதத்தில் நான் கேட்டுக் கொண்டிருந்தவாறு கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் பலர் அந்தப் பணியை தொடங்கவில்லை. அவர்களும் அடுத்த ஓரிரு நாட்களில் மக்களை சந்திக்கும் பணியை தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். அனைவரின் செயல்பாடுகளையும் நான் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறேன். சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பாராட்டுகளும், செயல்படாதவர்களுக்கு கண்டிப்புகளும் உறுதி. யாரையும் கண்டிக்க வேண்டிய தேவை எழக்கூடாது என்பதே என் விருப்பம்.


டிசம்பர் 4ம் தேதிக்கு பிறகு பல மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு பதவி கிடைப்பதற்கு முன்பே அந்தக் கடிதத்தை படித்திருக்கக்கூடும். படித்தவர்கள் அந்தக் கடிதத்தில் உள்ள அம்சங்களை நினைவூட்டிக் கொள்ளுங்கள். படிக்காதவர்கள் எனது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அக்கடிதத்தை படித்து அதில் உள்ள விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள். அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு புதிய மாவட்ட செயலாளர்களும் மக்கள் சந்திப்பைத் தொடங்குங்கள்.




மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட பணி நமக்கு காத்திருக்கிறது. கட்சி அமைப்பு ரீதியான ஒன்றியங்களில் இரு சக்கர ஊர்தி பேரணி நடத்துவதுதான் நமது அடுத்தக்கட்ட பணி ஆகும். நமது  கட்சியின் அமைப்பு ரீதியிலான ஒன்றியம் என்பது 20 முதல் 25 கிராமங்களை உள்ளடக்கியது ஆகும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது ஆயிரம் பேர் இரு சக்கர ஊர்திகளில் கட்சி ரீதியிலான ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று நமது கொள்கைகளையும் சாதனைகளையும் சொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு கிராமத்தில் அங்குள்ள மக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து ஆதரவைத் திரட்டுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.


ஒன்றிய அளவிலான இரு சக்கர ஊர்தி பேரணியை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் நானே நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளேன். மாவட்ட செயலாளர்களும், ஒன்றிய செயலாளர்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். இது தொடர்பான அறிவிப்பை கட்சித் தலைமை விரைவில் வெளியிடும். அதற்காகக் காத்திருங்கள்” இவ்வாறு அவர் கூறினார்.