தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கத்தை காட்டிலும் அடுத்தாண்டு தமிழ்நாட்டில் நடக்கும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். 

விஜய்யை விடாமல் தாக்கும் சீமான்:

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், வந்தால் அவரை தீவிரமாக ஆதரிப்பேன் என்றும், விஜய் தனது தம்பி என்றும் கூறி வந்தவர் சீமான். 

ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் பெரியார் என்று விஜய் அறிவித்தது சீமானுக்கு பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. தமிழ் தேசியமும், திராவிடமும் தனது இரு கண்கள் என்று கூறியது சீமானுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சீமான் தனது ஒவ்வொரு பேச்சிலும் விஜய்யை சரமாரியாக விமர்சித்து வருகிறார். 

நடிகன் நாடாள துடிக்கலாமா?

இந்த சூழலில், சீமான் தான் நடத்திய மரங்கள் மாநாட்டில் ஒப்பனை அழித்த உடனே அரியணை, நடிகன் நாடாள துடிக்கலாமா? என்று விஜய்யை சரமாரியாக விமர்சித்தார். விழுப்புரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீமான் நடத்திய மாநாட்டில் விஜய்யை அணில் குஞ்சு என்றும், தளபதி அல்ல தலைவிதி என்றும் கேலி செய்து பேசினார். 

என்ன காரணம்?

சீமானின் இந்த பேச்சுக்கு காரணம் விஜய்யால் மிக கடுமையாக பாதிக்கப்படுவது சீமானின் வாக்கு வங்கியே என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், திமுக மற்றும் அதிமுக-விற்கு என்று மிகப்பெரிய வாக்கு வங்கி உள்ளது. அவர்களின் வயது பெரும்பாலும் 40 வயதை கடந்தே உள்ளது. அவர்கள் உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பழகியவர்கள். 

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதத்தை அதிகரித்து வரும் கட்சியாக நாம் தமிழர் உள்ளது. இந்த கட்சிக்கு வாக்கு அளிப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர். இவர்களில் விஜய் ரசிகர்களும் ஏராளமானோர்கள் உள்ளனர். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு விஜய்க்கு ஆதரவான சீமானின் கருத்துக்களும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். 

பிரியப்போகும் வாக்கு?

ஆனால், இளைஞர் பட்டாளத்தை அதிகம் கொண்ட விஜய்யால் இளைஞர்கள் வாக்குகள் அதிகம் கொண்ட சீமானுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விஜய் திமுக மற்றும் அதிமுக-வின் வாக்குகளை பிரிப்பதை காட்டிலும் சீமானின் வாக்குகளையே அதிகளவு பிரிப்பார் என்றும் அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இதன் காரணமாகவே, சீமான் தான் நடத்தும் ஒவ்வொரு மாநாட்டிலும் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இதுதவிர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் முக முத்து மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பிறகு சீமான் விஜய்யைத் தாக்குவது மிக அதிகரித்துள்ளது என்றும், அதேசமயம் திமுக மீதான சீமானின் விமர்சனம் மிகவும் குறைந்துள்ளது என்றும் அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

அனல் பறக்கும் அரசியல் களம்:

வரும் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதற்கான தேர்தல் பரப்புரையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக தனது கூட்டணியை பலப்படுத்தி இந்த தேர்தலில் இறங்குகிறது. இதன்மூலமாக ஆட்சியைத் தக்க வைக்க இயலும் என்று கருதுகிறது. அதிமுக-வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் அவர் உள்ளார். இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ள சீமானும் தொடர் பயணத்தில் உள்ளார். 

கடுமையான சவால்களுக்கு மத்தியில் தேர்தல் களத்தில் குதிக்க உள்ள விஜய்யும் விரைவில் மக்கள் சந்திப்பைத் தொடங்க உள்ளார். இதனால், அடுத்த 10 மாத காலம் தமிழ்நாட்டின் அரசியல் களம் அனல் பறக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.