அமமுகவின் மகளிர் அணி ஐ.டி.பிரிவு செயலாளராக இருந்த ஜமீலா அந்தக் கட்சியிலிருந்து விலகி தற்போது எதிர்கட்சியான அதிமுகவில் இணைந்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் இன்று கட்சியில் இணைந்தார்.சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி அடுத்து பாரதிய ஜனதா கட்சி, அமமுக என பல்வேறு கட்சிகளுக்குத் தாவியவர் தற்போது அதிமுகவில் இணைந்திருக்கிறார். அவரிடம் பேசினோம்...
அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணையக் காரணம் என்ன?
எனது குடும்பம் தொடக்கத்திலிருந்தே அதிமுக குடும்பம்தான். ஆனால் முன்பு அந்தக் கட்சியில் இணைவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. நானும் பாரதிய ஜனதா, அமமுக என பல்வேறு கட்சிகளில் இருந்தேன். தற்போதுதான் அதிமுகவில் இணைந்து மக்களுக்குப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. முக்கியமாக மற்ற கட்சிகளைப் போல அதிமுக குடும்ப அரசியல் கட்சி கிடையாது. நான் கட்சியில் இணைவதற்கு அதுதான் முக்கியக் காரணம்.
பாஜக, அமமுக-வைக் குறிப்பிட்டீர்கள்..நீங்கள் தொடக்கத்தில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியைக் குறிப்பிட மறந்துவிட்டீர்களே?
தாராளமாகக் குறிப்பிட்டுக்கொள்ளுங்கள். சமத்துவ மக்கள் கட்சி போன்ற சிறிய கட்சியிலும் நான் இருந்திருக்கிறேன். ஆனால் இப்படி பல்வேறு கட்சிகளில் இருந்தது எனக்கு அரசியலைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
அமமுகவிலிருந்து திடீரென விலகக் காரணம் என்ன, கட்சியில் உங்களுக்கு இடமில்லையா?
கட்சியில் எனக்கு இடம் இருந்தது.அந்தக் கட்சிக்குதான் இங்கே தமிழ்நாட்டில் இடமில்லை. தினமும் அறிக்கை மட்டும்தான் வெளியிட்டுட்டு இருக்காரு. கட்சியிலிருந்து பல்வேறு நபர்கள் விலகி மாற்றுக்கட்சிக்கு போயிட்டு இருக்காங்க. மக்களைச் சந்திக்கிறதே கிடையாது. வெறும் அறிக்கை வெளியிடும் கட்சியில் நாம எதுக்கு இருக்கனும்.
அதிமுகவில் மகளிரணி வெற்றிடமாக உள்ளது அதனைக் கைப்பற்றதான் நீங்கள் கட்சியில் இணைந்ததாகக் கூறப்படுகிறதே?
எனக்கு அப்படியான எண்ணமில்லை. அதிமுகவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்டகால ஆசை. அதான் இணைந்தேன்.
அதிமுகவுக்கு வந்தாலே அது திமுகவுக்கு கட்சித்தாவுவதற்காகத்தான் என்று சொல்பவர்கள் உண்டு. எதிர்காலத்தில் திமுகவில் இணைவீர்களா?
எனக்குப் பிடிக்கவே பிடிக்காத கட்சி திராவிட முன்னேற்றக்கழகம் அதனால் அதில் இணைய வாய்ப்பே இல்லை.
இப்படித்தான் அமமுக, பாஜகவில் இருந்தபோது அதிமுக., வைச் சொன்னீர்கள்?
மாற்றுக்கட்சியில் இருந்தால் மற்ற கட்சியை விமர்சிப்பது அரசியலில் இயல்புதானே. அதற்கு அப்புறம்தான் பாரதிய ஜனதா அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அதற்குப் பிறகு நான் அதிமுக., வை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டேன். ஆனால் நான் திமுக.,வில் சேர்வேன் என்பது கனவிலும் நடக்காது, என்றார்.