நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 1800 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மற்றும் திமுக இளைஞரணி மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் ஆகியவை மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ் ஏற்பாட்டில் பகுதி கழக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பாடநூல் கழகத் தலைவரும் திமுக கொள்கை பரப்பு செயலாளருமான திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டு பொது மக்களுக்கு தையல் மெஷின், சேலை, வீட்டு உபயோக பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றி பேசிய அவர், ”பெண்கள் சுதந்திரமாக பேருந்துகளில் பயணம் செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டம் வகுத்து பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை செய்து கொடுத்துள்ளார். தமிழகத்தில் வெள்ளம் பாதித்தபோது தண்ணீர் உணவு இல்லாமல் உயிரோடு இருப்போமா என்ற நம்பிக்கையே இல்லாமல் இருந்தபோது வராமல் தமிழ் சொந்தங்களே என நெல்லையில் பிரதமர் மோடி மேடையில் பேசுகிறார். பிரதமர் மோடியின் நாடகம் தமிழகம் மட்டுமல்ல இந்திய நாட்டில் எங்கும் இனி எடுபடாது. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பார்க்க கூட வராத பிரதமர் ராமேஷ்வரத்தில் சென்று தீர்த்தமாடுகிறார். நேரம் காலத்தில் செய்யாத உதவி பயனில்லாமல் இல்லாமல் போய்விடும். மின்சாரம்,உணவு என எதுவும் இல்லாமல் வெள்ள காலத்தில் மக்கள் அவதிபட்ட போது பார்க்காத பிரதமர் எங்களுக்கு தேவையில்லை.
ஆபத்து காலத்தில் ஓடிவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் எங்களுக்கு வேண்டும். ஆண்களுக்கு ₹1000 உரிமை தொகையை கொடுத்திருந்தால் மது அருந்தியே ரூபாய் அனைத்தையும் காலி செய்துவிடுவார்கள். பெண்கள் கையில் ₹1000 மாதம் மாதம் கிடைத்தால் அதனை சேமித்து பெண் பிள்ளைகளை திருமணம் செய்து வைப்பார் என்ற நல்ல நோக்கில் இந்த திட்டத்தை முதல்வர் கொண்டு வந்தார். பண்பாடு, கலாச்சாரத்தை தமிழ் பெண்கள் தான் காப்பாற்றுகின்றனர். பெண்கள் மரியாதையோடு வாழ்வதற்கு பெண் பிள்ளைகளுக்கான கல்வியை ஊக்குவித்து அதிகார பதவிக்கு வந்தால் மட்டுமே தலைநிமிர முடியும் என்ற நோக்கில் திமுக தலைவர் கருணாநிதியால் பெண் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. பெண்களின் கல்விக்கு மாதம் ₹1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் கொண்டு வரப்பட்டு வருடம் 2½ லட்சம் பெண் பிள்ளைகள் உயர்கல்வியில் சேர்ந்து வருகின்றனர். இது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையையில் அதிகமாகும்.
பிரதமர் வாயால் அனைத்து திட்டங்களை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார். அண்ணாமலைக்கு ஒரு வேண்டுக்கோள் நீங்கள் கோபப்படாமல் இருங்கள்., நிதானமாக பதில் கூறுங்கள், ஆளுனர் ஆர்.என் ரவியை மாதிரி தங்கமானவர் யாரும் இல்லை.அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குழப்பமான வார்த்தைகளை சொல்லி வருகிறார். பொதுக்கூட்டங்களில் பேசி வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம். ஆளுனர் ரவி யாரை பார்த்தாலும் அவருக்கு காவி உடை அணிந்துவிடுகிறார். திருவள்ளுவர், வடலூர் வள்ளலார், அய்யா வைகுண்டர் போன்றவர்களுக்கு ஆளுனர் காவி உடை அணிந்து விடுகிறார். கல்யாண வீட்டில் மலர் வளையம் கொண்டு சென்றால் அசிங்கமாகும். அதே போல் ஆளுனர் அனைவருக்கும் காவி ஆடை அணிந்து விட்டு மதச்சாயம் பூசி அசிங்கம் செய்து கொண்டிருக்கிறார். ஜாதி, மதம் என வேறுபாடுகள் இருந்தாலும் கூட அனைவரையும் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் அமர வைத்த இயக்கம் திமுக. இந்தியாவில் 6 மாநிலங்களில் ஆட்சியை பாஜக இழந்து உள்ளது. வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜகவினர் மனப்பால் குடித்து வருகின்றனர். இந்தியா கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர். மதச்சார்பற்ற பிரதமராக அவர் ஆட்சியில் இருப்பார்” என அவர் தெரிவித்தார்.