தமிழ்நாட்டில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வருகின்ற தேர்தலில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோன்று அந்தந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், வருகின்ற தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ சீட் வாங்குவதற்கும் காய்களை நகர்த்தி வருகின்றனர். 

Continues below advertisement

அமித்ஷாவின் அதிரடி முடிவு என்ன ?

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தலைவர்களும், எம்எல்ஏ சீட் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பாஜகவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களை நேரடியாக அமித்ஷா தேர்ந்தெடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

2024 தேர்தல் கொடுத்த ஏமாற்றம்

இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜகவிற்கு 20 இடங்களில் போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது. இதன் மூலம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாஜகவிற்கு தமிழகத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

அதன் பிறகு நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக - பாஜக கூட்டணி இரண்டாக உடைந்தது. அதிமுக மற்றும் தேமுதிக இணைந்து தேர்தலை சந்தித்தது. பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்தித்து இருந்தது. இந்த தேர்தலில் பாஜக தனித்து 4 தொகுதிகளும், கூட்டணியாக 8 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என பாஜகவின் டெல்லி தலைமை கணக்கு போட்டு இருந்தது. ஆனால் அந்த தேர்தலில் பாஜக கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

டெல்லி எடுத்த அதிரடி முடிவு

இதனால் இந்த முறை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் பெரும்பாலானோர் வெற்றி பெற வேண்டும் என டெல்லி தலைமை நினைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போதே டெல்லி தலைமையிடம் சீட் பெறுவதற்காக பல மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர். ஆனால் இந்த முறை தெரிந்த முகங்கள், சிபாரிசு ஆகியவற்றை டெல்லி தலைமை ஏற்காது என தெரிவித்தனர்.

இது குறித்து நிர்வாகிகளிடம் மேலும் பேசுகையில், இந்த முறை நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தல் பாஜகவிற்கு மிக முக்கிய தேர்தலாக டெல்லி தலைமை பார்க்கிறது. இது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் இந்த தேர்தல் இருப்பதால், 2026 தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வைக்க வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த முறை வேட்பாளர்கள் தேர்வில், டெல்லி தலைமையின் நேரடி பார்வை இருக்கும் என தெரிவித்தனர். 

களத்தில் இறங்கிய மத்திய உளவுத்துறை

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கணக்கெடுக்க மத்திய உளவுத்துறை அதிகாரிகளை முடக்கி விட்டிருப்பதாகவும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். 

இந்த தகவலின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெற்று, அதன் மூலம் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் குறித்து தகவல் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க அமித்ஷா முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் டெல்லி தொடர்பு மூலம், எம்எல்ஏ சீட் கிடைத்துவிடும் என எதிர்பார்த்து இருந்தவர்கள் சற்று கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.