நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், வரும் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.


வன்முறையை தூண்டும் விதமாக பேசினாரா அமித் ஷா?


மேற்குவங்கத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சைக்குரிய விதமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய கருத்துகள் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் தொடர்ச்சியாக வன்முறையை தூண்டும் விதமாக அமித்ஷா பேசியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவின் ரவுடிகளை தலைகீழாக தொங்கவிட்டு தோலுரிப்பேன் என கூறியுள்ளார்.


உத்தர தினாஜ்பூர் மாவட்டம் கரண்டிகி கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, "குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் தைரியம் இல்லை. புதிய சட்டத்தின் கீழ் அனைத்து இந்து அகதிகளும் குடியுரிமை பெறுவார்கள்.


"ராமர் கோயிலை கொடுத்தவர் மோடி"


மம்தா பானர்ஜியால் ஊடுருவலை நிறுத்த முடியுமா? அவர்களால் முடியாது. (பிரதமர் நரேந்திர) மோடியால் மட்டுமே ஊடுருவலை தடுக்க முடியும். கடந்த முறை எங்களுக்கு 18 இடங்களை கொடுத்தீர்கள். ராமர் கோயிலை கொடுத்தவர் மோடி. இந்த முறை எங்களுக்கு 35 இடங்களை கொடுங்கள். ஊடுருவலை நிறுத்துவோம்.


சந்தேஷ்காலியில் மம்தா பானர்ஜி தனது வாக்கு வங்கி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெண்களை சித்திரவதை செய்ய அனுமதித்தார். உயர்நீதிமன்றம் தலையிட்டு இன்று குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தாய்மார்கள், நிலம், மக்கள் என்ற முழக்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தார். சந்தேஷ்காலியில், தாய்மார்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. மக்கள் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாஜகவுக்கு வாக்களியுங்கள். மம்தா பானர்ஜியின் குண்டர்களை தலைகீழாக தொங்கவிடப்பட்டு தோலுரிப்பேன்" என்றார்.


தொடர்ந்து பேசிய அமித்ஷா, "நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வடக்கு வங்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கும் என்று உறுதியளிக்கிறேன். ராய்கஞ்சில் எய்ம்ஸ் அமைக்க திட்டமிட்டிருந்தோம். அதைத் தடுத்தது மம்தாதான். இது மோடியின் உத்தரவாதம். எங்களுக்கு 30 இடங்கள் கொடுங்கள். வடக்கு வங்காளத்தின் முதல் எய்ம்ஸ் பணியைத் தொடங்குவோம்" என்றார்.


இதற்கு பதிலடி அளித்த மம்தா, "அச்சமும் பீதியும் பாஜகவை வாட்டி வதைத்துள்ளது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, அவர்கள் தோல்வியை உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஆதாரமற்ற செய்திகளை கூறுகிறார்கள்" என்றார்.


இதையும் படிக்க: Fact Check: இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை பேச்சு! மன்மோகன் சிங் சொன்னதாக பிரதமர் மோடி கூறியது உண்மையா?