தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக செயல்பட்டு வருகிறது.
அதிமுக - பாஜக:
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, தமாக, அமமுக கட்சிகள் தற்போது வரை இடம்பெற்று வருகின்றனர். ராமதாஸ் - அன்புமணி ஒருங்கிணைந்த பாமக-வை உள்ளே கொண்டு வர அதிமுக ஆர்வம் காட்டி வருகிறது. மறுமுனையில் தேமுதிக-வை உள்ளே கொண்டு வருவதற்காக தேமுதிக-விடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அமித்ஷா போட்ட உத்தரவு:
பாஜக-வுடன் கூட்டணி அமைத்த பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான், முதலமைச்சர் வேட்பாளரை அமித்ஷாதான் முடிவு செய்வார் என்ற பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் அதிமுக-விற்கு கடும் தலைவலியை உண்டாக்கியது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கியது. இதனால், அதிமுக தலைவர்களும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி, தனித்துதான் ஆட்சி என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இபிஎஸ்தான் முதலமைச்சர்:
இதன்பின்பும், முட்டலும் மோதலுமாகவே இருந்து வந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி உடையும் என்றும் பலரும் விமர்சித்தனர். இந்த நிலையில், சமீபத்தில் திருநெல்வேலி வந்த அமித்ஷா நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், எச்.ராஜா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையில், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலைச் சந்திக்கிறது. அக்கட்சி சார்பில்தான் முதலமைச்சர் வேட்பாளர் நிறுத்தப்படுவார். எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர். இதை பாஜக-வினர் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுச் சென்றுள்ளார்.
மகிழ்ச்சியில் இபிஎஸ்:
இதன் எதிரொலியாகவே, நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஆட்சி அமைப்பது குறித்து அவர்தான் முடிவு செய்வார் என்று பேட்டி அளித்துள்ளார். தொடர்ந்து கூட்டணிக்கு முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வந்த அண்ணாமலையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.
கூட்டணிக்கு குடைச்சல் தந்து வந்த பாஜக தற்போது அதிமுக தலைமையிலே ஆட்சி என்றும், எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் கூறியிருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.
காரணம் விஜய்யா?
அமித்ஷாவின் இந்த உத்தரவுக்கு பின்னால் விஜய்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக-வை கழட்டிவிட்டால் அவர்களுடன் விஜய் கரம்காேர்ப்பார் என்று தொடர்ந்து தகவல்களும், மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் தொடர்ந்து வெளியாகி வந்தது.
மேலும், மதுரையில் பேசிய விஜய் அதிமுக-வின் தற்போதைய நிலை குறித்தும், அதிமுக-வின் உண்மையான தொண்டர்களின் மனநிலை என்றெல்லாம் பேசியதும், எம்ஜிஆரைப் புகழ்ந்து பேசியதும் பாஜக-விற்கு கிலியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், இந்த சூழலில் கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவிப்பது அதிமுக பாஜக-வை கழட்டிவிட்டு, தங்களுடன் தவெக-வை இணைத்துக் கொள்ளுமோ என்ற அச்சத்தை பாஜகவிடம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், தேர்தல் நேரத்தில் தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களைத் தெரிவித்து கூட்டணியை உடைக்கும் என்று அமித்ஷா கருதியதன் விளைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.