சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் வெளியே வந்த அமித்ஷா, சாலையில் கூடியிருந்த தொண்டர்கள் கூட்டத்தை பார்த்து, காரை விட்டு இறங்கி, சிறிது தூரம் தொண்டர்கள் கூட்டத்திற்கு இடையே நடந்து சென்று, உற்சாக வரவேற்பை பெற்றுக் கொண்டார்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானத்தில் இன்று இரவு 9. 28 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வரவேற்றனர். அமித்ஷாவை வரவேற்பதற்கு சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல் முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் எச். ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சக்கரவர்த்தி உள்ளிட்ட 12 பேர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்களில் சிலர், விமான நிலையத்திற்கு வராமல், கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் வரவேற்க நின்று விட்டனர்.


இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து காரில் உள்துறை அமைச்சர் அமீத்ஷா சென்னை விமான நிலைய ஆறாம் எண் கேட் வழியாக வெளியில் வந்தார். அங்கு ஜிஎஸ்டி சாலையின் இரு பகுதிகளிலும், பாஜக தொண்டர்கள் கொடிகளுடன் திரண்டு நின்று, வாழ்த்தி கோஷமிட்டனர்.


இதையடுத்து அமித்ஷா காரில் இருந்து கீழே இறங்கி, சாலையில் சிறிது தூரம் நடந்தபடி தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். அப்போது போலீஸ் தடுப்பையும் மீறி, தொண்டர்கள் பலர் சாலைகளில் வந்து அமித் ஷாவுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.


அதன் பின்பு அமீத்ஷா மீண்டும் காரில் ஏறி கிண்டி நட்சத்திர ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இதற்கு இடையே அமித்ஷா காரில் ஏறி புறப்படும் போகும் நேரத்தில், விமான நிலையத்திற்கு எதிரே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. ஆனால் அமித்ஷா அதை பொருட்படுத்தாமல், காரில் ஏறி கிண்டி நட்சத்திர ஹோட்டல் புறப்பட்டு சென்று விட்டார்.


ஆனாலும் பாஜக தொண்டர்கள், எங்கள் தலைவர் வரும்போது வேண்டுமென்றே மின்தடையை ஏற்படுத்தி, ஒரு இருளான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டனர் என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அமைதிப்படுத்தி, கலைத்தனர். இன்று மாலையில் பலத்த சூறைக்காற்று இடி மின்னல் மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மின் ஒயர்கள் அறுந்ததால், இந்த மின்தடை ஏற்பட்டது. இது தற்செயலாக ஏற்பட்டது தான் என்று பாஜகவினரிடம் கூறினர். ஆனாலும் பாஜகவினர் அதை ஏற்றுக் கொள்ளாமல் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையே சிறிது நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்துவிட்டது. இதை அடுத்து பாஜகவினர் அமைதியாக கலைந்தனர்.


அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிகள்:


மத்திய அமைச்சர் அமித் ஷா 12.06.2023 ஞாயிறு காலை, ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டு, சென்னை பள்ளிக்கரணை அருகே கோவிலம்பாக்கம், ராணி மஹால் திருமண மண்டபத்தில், பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின்பு மீண்டும் ஹோட்டலுக்கு திரும்புகிறார்.


பின்பு ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து பகல் 1:45 மணிக்கு ஹெலிகாப்டரில் வேலூர் புறப்பட்டு செல்கிறார். வேலூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் மாலை 4:30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் வருகிறார்.


அதன்பின்பு மாலை 4:40 மணிக்கு தனி விமானத்தில், சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்கிறார்.