மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தன் நேர்மையற்ற ஏமாற்றும் குணத்தால் தான் இந்த உயர் பதவியை அடைந்துள்ளதாக பாஜக தலைவர் அமித் மாள்வியா காட்டமான கருத்தை முன்வைத்துள்ளார்.
முதலமைச்சர் இல்லத்தில் இருந்து வெளியேறிய தாக்கரே
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சி எம்எல்ஏக்கள் 34 பேர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவின் குதிரை பேரத்தில் விலை போயிருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
முன்னதாக எம்.எல்.ஏக்களுக்கு தான் முதலமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை என்றால் பதவி விலகத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே அறிவித்த நிலையில், முதலமைச்சர் இல்லமான வர்ஷா பங்களாவில் இருந்து நேற்று இரவு தன் குடும்பத்துடன் உத்தவ் தாக்கரே வெளியேறினார்.
பாஜக தலைவர் கடும் விமர்சனம்
இச்சூழலில், எதிர்க்கட்சியினர் மீது கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து வைத்து வரும் பாஜக தேசிய ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா, நாட்டில் மிக மோசமாக செயல்படும் முதலமைச்சர்களில் தாக்கரேவும் ஒருவர் எனவும், அவரால் சொந்தக் கட்சி எம்எல்ஏக்களையே ஒற்றுமையாக வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜூன் 22ஆம் தேதி உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை தாக்கரே சந்திதாக செய்திகள் வெளியானது.
”இந்நிலையில், வீட்டை விட்டே வெளியேறக்கூடாத உத்தவ் தாக்கரே சரத் பவாரை சந்தித்துள்ளார். தாக்கரேவின் இந்த நேர்மையற்ற தன்மை தான் அக்கட்சி எம் எல் ஏக்களின் கிளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது” என அமித் மாள்வியா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியல் சூழல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. அதில் 106 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சை உள்ளிட்ட மற்றவைகள் 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பாண்மைக்கு 144 இடங்கள் தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ’மகா விகாஸ்’ என்ற கூட்டணியில் 152 சீட்டுகளுடன் ஆட்சி அமைத்தது.
முன்னதாக இக்கூட்டணியின் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் உயிரிழந்த நிலையில், 144 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆட்சி அமைப்பதற்கு தேவை. இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும் மகாராஷ்டிரா பொதுப் பணித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 34 அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராக திரண்டுள்ளனர். இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 131 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை.
இந்நிலையில் தமக்கு 135 பெரும்பான்மை இருப்பதாக பாஜக கூறி வருகிறது. இது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட 2 இடங்களே அதிகம். இது 27 இடங்களை கொண்டுள்ள மற்றவை ஆதரித்தால் மட்டுமே சாத்தியம் . ஆனால் சிவசேனா கட்சியில் இருந்த 21 உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சி தாவல் சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இது சிவசேனா கூட்டணி கட்சிகளுக்கு மிக சிக்கலான காலமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் பாஜக கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது, அவர்களால் சிலரை விலைக்கு வாங்கி அசாதாரண சூழலை மட்டுமே ஏற்படுத்த முடியும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹரிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.