தாமரை அடர்ந்து பரவும் இடமாக தமிழகத்தை மாற்றுவதற்கான முன்னெடுப்புகளில் பாஜக தீவிரமாக களமிறங்குகிறது. அதுவும்,  தமிழ் மாடல் எனும் திராவிடன் ப்ளஸ் திட்டத்துடன் தமிழக அரசியலில் புத்தம்புது பாணியுடன் இறங்குகிறது பாஜக.


தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளாக இருப்பவை அஇஅதிமுகவும் திமுகவும். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக இவ்விரு கட்சிகளும் மாறி, மாறி, தமிழகத்தை ஆட்சி  செய்து வருகின்றன.



 
தற்போது ஆட்சிக்கட்டிலில் இருக்கும் திமுக, அரசிற்கு உள்ள கடன்களைச் சமாளிப்பதற்கான முயற்சிகள், ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவாகாமல் செய்வது,  கட்சிக்குள் வாரிசு அரசியல் ஆகியவற்றில் பிஸியாக உள்ளது. மறுபுறத்தில் ஆண்ட கட்சியான அதிமுக-வில் உட்கட்சிப்பூசல் வெடித்து, வீதிக்கு வந்துவிட்டது.  கட்சி அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைக்கும் அளவிற்கு, ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட வன்முறை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 




இன்றைய அரசியல் சூழலில் ஏற்பட்ட நெளிவு சுளிவுகளைப் பயன்படுத்தி, பாஜகவை வலுப்பெற செய்ய தமிழக தலைமை அதிரடி திட்டம் போட்டுள்ளது. 


பாஜகவின் தமிழ் மாடல் திராவிட ப்ளஸ் திட்டம்:



  • ஒற்றைத் தலைமையுடன் குழப்பத்தின் விளிம்பில் இருக்கும் அஇஅதிமுகவுடன், தங்களின் தேர்தல் கூட்டணி தொடரும் என அறிவித்திருக்கும் பாஜக, தமிழகத்தில் திராவிட ப்ளஸ் மாடல் (Tamil based Dravidian Plus) என்ற இலக்குடன் புதுத்தெம்புடன் களமிறங்குகிறது. இது பாஜகவின் முக்கிய அணுகுமுறையாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ABP நாடு-விடம் பிரத்யேகமாகத் தெரிவித்துள்ளார்.

  • தமிழ் மாடல் வளர்ச்சி என்பதுதான் பாஜவின் இலக்கு என்றும் அதற்கேற்ப 3  விதமான திட்டங்களுடன் தமிழக பாஜக விறுவிறுப்பாக களமிறங்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, நகர்ப்புற கட்சி பாஜக என்ற மாயையை உடைக்கும் வகையில் கிராமங்களை நோக்கி தமிழக பாஜக களமிறங்க முடிவு செய்துள்ளது.  கடன் வாங்கி வளர்ச்சி எனும் திராவிட மாடலை மாற்றும் வகையில் தமிழ் மாடல் வளர்ச்சி இருக்கும் என்று நம்மிடம் தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் வளர்ச்சி இருக்கும் வகையில் தமிழ் மாடல் திராவிட ப்ளஸ் திட்டம் இருக்கும் என்று தெரிவித்தார்.

  • கடன் வாங்காமல், வளர்ச்சிப் பாதைக்கு தமிழர்கள் உள்ளடக்கிய இந்தியர்களை அழைத்துச் செல்வதுதான்  திராவிட ப்ளஸ் எனும் தமிழ் மாடல் வளர்ச்சி என தெரிவித்த அண்ணாமலை, அதற்கேற்ப தமிழகம் முழுவதும் தீவிர முன்னெடுப்புகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.





  • மத்திய அரசு திட்டங்கள் குறித்தும், அதன் பலன் அனைவரையும் சென்றடைகிறதா என்பதை பாஜக தொண்டர்கள் வரும் நாட்களில் உறுதி செய்வதுடன், பாஜகவின் கொள்கைகளை கிராமப்புறங்களில் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு செல்லும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்மிடம் தெரிவித்தார்.

  • தேசியத்தை உள்ளடக்கிய தமிழ் மாடல் திராவிட ப்ளஸ் திட்டத்தில், ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட தேசியவாதிகளைச் சேர்த்துக் கொண்டு, ஆன்மீகமும் தமிழ் மொழியும் தமிழ்க் கலாச்சாரமும் இணைந்த வளர்ச்சி நாடாக தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக-வின் வலிமையை முழுமையாகக் காட்டுவோம் என ABP நாடுவிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

  • தென்னிந்தியாவில், கர்நாடகத்தைத் தவிர்த்து தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளம் ஆகிய இடங்களில் பாஜக குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தச்சூழலில், பாண்டிச்சேரியில் அதிகாரச் செல்வாக்குடன் இருக்கும் பாஜக, தமிழகத்தில், திமுகவுக்குப் போட்டியாக, தமிழ் மாடல் எனும் திராவிட ப்ளஸ் வளர்ச்சி என்ற அணுகுமுறையுடன் கிராமங்களை குறிவைத்து களமிறங்குகிறது.

  • நேர்மறையோ, எதிர்மறையோ, ஆனால், தொடர்ந்து, தமிழக அரசியலில் சலசலப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வரும் அண்ணாமலையின் முன்னெடுப்புகளுக்கு, பாஜக-வின் அகில இந்திய தலைமையும் பச்சைக் கொடி காட்டியுள்ளதாம். அதுமட்டுமல்ல, திமுக, அதிமுகவைச் சேர்ந்த அதிருப்தியாளர்களுக்கு வலைவீசும் பணியும் ஒருபக்கம் தீவிரமாக நடந்து வருகிறதாம்.

  • இந்தச்சூழலில்தான், தமிழக கிராமங்களில் தாமரை மலர்வதற்கு தமிழ்மாடல் எனும் திராவிட ப்ளஸ் திட்டம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், பாஜகவின் திராவிட ப்ளஸ் திட்டத்திற்கு, திமுகவும்  அதிமுகவும் எப்படி பதிலடி தரப்போகின்றன என்பது அடுத்தடுத்த நகர்வுகளில் தெரிய வரும்.  திராவிட மாடலுக்குப் போட்டியாக களமிறங்கும் பாஜகவின்  தமிழ் திராவிட ப்ளஸ் மாடல் பலன் தருமா, இல்லையா என்பதைவிட,  தமிழக  அரசியல் சதுரங்கத்தை விறுவிறுப்பாக்குவது மட்டும் நிச்சயம்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண