திருப்பத்தூர் மாவட்டத்தில் நடக்கவிருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு விசிக, எஸ்டிபிஐ, மமக உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஏபிபி நாடு செய்தி நிறுவனம் சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசிடம் பேசினோம்.
திருப்பத்தூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு விசிகவின் நிலைப்பாடு என்ன?
இது ஜனநாயாக விரோத நடவடிக்கை, எல்லோரும் விரும்பும் உணவை சாப்பிடலாம் என்பது ஜனநாயகம்; மாட்டுக்கறிக்கு தடை விதிப்பது சங்பரிவார் அமைப்புகளின் நோக்கம், மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை விதித்திருப்பது சரி அல்ல
மாட்டுக்கறி தடைக்காக போராடுபவர்கள், பன்றிக்கறி இடம்பெற போராடுவார்களா?
மாட்டுக்கறி பிரியாணிதான் எல்லா கடைகளிலும் உள்ளது, பன்றி கறி பிரியாணி எங்கும் இல்லை, அப்படி பன்றிக்கறி பிரியாணி என ஒன்று இருந்தால் அதை கொடுங்கள் சாப்பிடுகிறோம். மாட்டுக்கறி பிரியாணி என்பது இந்தியா முழுக்க சாப்பிடும் உணவு, முஸ்லீம், தலித்துகள் மட்டுமல்ல எல்லா சமுதாயத்தினரும் சாப்பிடுகின்றனர். மாட்டிறைச்சிக்கு தடை என்பது சங்பரிவாரின் அரசியல் மதவெறி போக்கு.
ஆனால் இந்த தடை என்பது சங்பரிவாரால் விதிக்கப்படவில்லை, திமுக அரசின் கீழ் உள்ள மாவட்ட ஆட்சியரால் விதிக்கப்பட்டுள்ளதே?
அந்த சிந்தனை இருக்கக்கூடாது என்று சொல்கிறோம், திருப்பத்தூர் மாவட்டத்தில் மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை விதிப்பார்களா? மக்கள் விரும்பும் உணவை அனுமதிப்பதுதான் ஜனநாயகம்.
பட்டனப்பிரவேசத்திற்கு அனுமதி, மாட்டிறைச்சிக்கு தடை, ஆவடியில் பசுப்பாதுகாப்பு மையம் போன்ற தமிழக அரசின் செயல்பாடுகள் மென்மையான இந்துத்துவா போக்கை கொண்டுள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே?
இந்துத்துவா அமைப்புகளுக்கு அடிபணிவது ஏற்புடையது அல்ல, அவர்களின் அஜண்டாவை செயல்படுத்தும் மாடல் திராவிட மாடல் அல்ல; இந்த மாதிரியான எதிர்ப்பை எதிர்கொள்வதுதான் கலைஞரின் யுக்தி, கலைஞரின் வாரிசாக உள்ள தளபதி ஸ்டாலின் இந்த மாதிரியான சம்பவங்களில் கடும் எதிர்ப்பை முன்னிருத்த வேண்டும். அயோத்தியா மண்டபம், பல்லக்கு விவகாரம், மாட்டிறைச்சி பிரச்சனைகளில் துணிந்து அரசு முடிவெடுக்க வேண்டும், சனாதன சக்திகளுக்கு அரசு பணியக்கூடாது.
முதலில் ஒன்றை சொல்லிவிட்டு மீண்டும் வேறு ஒன்றை தமிழக அரசு செய்வது திராவிட மாடல் கொள்கைக்கு நேர் எதிர்மாறாக உள்ளதே?
திமுகவுக்கு வாக்களிப்பது சனாதன எதிர்ப்பில் இருந்துதான் வாக்களிக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கை