தந்தை பெரியார், அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் திராவிட தத்துவத்தின் குறியீடு  ஆவார்கள் இன்று இவர்களின்  அடையாளமாக திகழ்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் படிப்படியாக வளர்ந்து பரிணாம வளர்ச்சி பெற்ற இந்தியாவின் ஒரே தலைவர் நமது முதல்வர்தான் என நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்தார்.


நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வள்ளியூரில் முதல்வர் மு. க. ஸ்டாலின் 70- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக துணை பொது செயலாளரும்  பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், 
"திமுக சார்பில் ஆண்டுதோறும் கொள்கை முழக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இது நமது இயக்கத்தின் பெருமையாகும். திராவிடத்தின் தத்துவம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இது போன்ற கொள்கை முழக்க நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தலைவர்களின் பிறந்த நாள்  விழாவின் போதும் குறிப்பாக தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய பிறந்தநாள் கொண்டாட்டங்களில் இது போன்ற கொள்கை பரப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏன் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்றால் தந்தை பெரியார், அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் திராவிட தத்துவத்தின் குறியீடு ஆவார்கள். இன்று அவர்களின் அடையாளமாக திகழ்பவர் மு.க.ஸ்டாலின் ஆவார். 16 வயதில் இளைஞரணி தொடங்கி, அடுத்து மாவட்ட பிரதிநிதியாக, பொதுச் செயலாளராக, துணைப் பொது செயலாளராக, பொருளாளராக, தலைவராக என படிப்படியாக வளர்ந்து பரிணாம வளர்ச்சி பெற்ற இந்தியாவிலேயே ஒரே முதல்வர் ஸ்டாலின்தான். திருமணமான 6 மாத்தில் மிசாவில் கைதாகி சிறை சென்றவர், ஆகவேதான் இந்தியாவில் 30 முதல்வர்கள் இருந்தாலும், அதில் நம்பர் ஒன் முதல்வராக நமது முதல்வர் உள்ளார்.  ஆட்சிப்பொறுப்பை திமுக ஏற்ற நிலையில் கொரோனா, மழை வெள்ளம், கடந்த ஆட்சிகாலத்தில் வைத்து சென்ற 6 லட்சம் கோடி கடன் என  அனைத்தையும் பிரச்சனைகளையும் சிறப்பாக  எதிர்கொண்டு வெற்றிபெற்றார்.


மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புதுமைப்பெண் திட்டம்., பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், கொரோனா நிவாரணம் என எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றிய நல்லாட்சி தமிழகத்தில் நடக்கிறது. அனைவரும் பாராட்டுகிறார்கள், டெல்லியில் இருந்து வரும் ஒரு நாளிதழ் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்று புள்ளிவிபரத்துடன் தெரிவிக்கிறது  மற்றவர்களைப் போல் காலில் விழுந்து முதல்வர் பதவிக்கு வந்தவர் எங்கள் தலைவர் அல்ல, எடப்பாடி பேனா சிலை எதற்கு என கேள்வி கேட்கிறார் அவருக்கு சொல்லிக் கொள்கிறேன் விவசாயிகளின் துயர் துடைத்து இலவச மின்சாரத்திற்கு கையெழுத்திட்ட பேனா, கைரிக்‌ஷா, பெண்களுக்கு சொத்துரிமை, ஆகிவற்றை பெற்றுத்தந்த பேனாவிற்குத்தான் சிலை என்கிறோம், எனவே எடப்பாடிக்கு பேனா குறித்து பேச அருகதையில்லை, குஜராத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 21 சதவீதம், தமிழகத்தில் 12 சதவீத்திற்கும் குறைவாக உள்ளனர். திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக உள்ளதா குஜராத்மாடல் சிறப்பாக உள்ளதா என்பதை மக்கள் அறியவேண்டும். 10 லட்சம் கோடி மோசடியில் ஈடுபட்ட அதானி பிரதமரை சந்திக்கிறார், அவர் பங்கேற்கும் நிகழ்சிகளில் பங்கேற்கிறார் ஆனால் இதுகுறித்து கேள்வி எழுப்பினார் மோடி எந்த பதிலும் இல்லை. நாடாளுமன்றத்தில் ஏற்றப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டம், நீட் தேர்வு, வேளாண் சட்டம் ஆகியவற்றிக்கு எதிராக அதை நிறைவேற்ற முடியாது என சட்டமன்றத்தில் தீர்மான நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஸ்டாலின்தான்" என்றார்.