தஞ்சாவூர்: அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் இ.பி.எஸ்.,சை தவிர்த்து விட்டு அதிமுக ஒன்றுப்படும் என்று ஓ.பி.எஸ். அணியை சேர்ந்தவரும் ஒரத்தநாடு எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.


தஞ்சாவூரில் நிருபர்களை சந்தித்த வைத்திலிங்கம் கூறியதாவது; அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்., அ.ம.மு.க., பொதுச் செயலாளரான தினகரனை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, ஓ.பி.எஸ்., பண்ருட்டி ராமசந்திரன் மட்டுமே சென்ற நிலையில், பிரபாகரன்,மனோஜ் பாண்டியன் இல்லாமல் சந்தித்ததில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.


அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என்பதால் தான் ஓ.பி.எஸ்., தினகரனை சந்தித்தார். ஆனால், இந்த சந்திப்பில் எங்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் அதில் வேறுபட்டு இருக்கிறோம் என முன்னாள் முதல்வராக இருந்த இ.பி.எஸ்., கற்பனையாக பேசுவது, அவர் வகித்த பதவிக்கு அழகல்ல. ஏதோ ஒரு சூழ்ச்சியால் அவர் முதல்வரானார்.


தற்போது, மாயமானும், மண்குதிரையும் நம்பி சென்றால் கரை சேர முடியாது என இ.பி.எஸ்., கூறியுள்ளார். அந்த மாயமான் இல்லாவிட்டால், இ.பி.எஸ்., முதல்வராகி இருக்க  முடியாது. துாதுவிட்டு,காலில் விழுந்து,முதல்வராகி அவர்களையே மாயமான் என்றும்,துரோகி என்றும்,வாய்க்கு வந்தபடி வார்த்தை எல்லாம் பேசும் இ.பி.எஸ்., கடந்த காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.


தினகரன், சசிகலாவின் கடைக்கண் பார்வை படாத என இயங்கிக் கொண்டிருந்த இ.பி.எஸ்., அதிகாரம் பலம், பணபலத்தை வைத்துக் கொண்டு, அ.தி.மு.க., என்ற கட்சியை தனது சொத்தாக மாற்ற நினைக்கிறார். இதை தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள். மண் குதிரை எனக் கூறும், இ.பி.எஸ்., தான் சண்டிக்குதிரை. சண்டிக்குதிரை எதற்கும் பயன்படாது.  


தினகரன்,சசிகலா உள்ளிட்டவர்களை தவிர்த்தால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது. இரட்டை இலை சின்னம் கிடைத்தும்,  எட்டு தேர்தல்களில், இ.பி.எஸ்., படுதோல்வியை சந்தித்தார். இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டால் இ.பி.எஸ்.,க்கு இரண்டு சதவீதம் கூட வாக்கு இருக்காது. ஆனால் தொண்டர்கள் ஓ.பி.எஸ்., தினகரன் பக்கம் தான் உள்ளனர்.  ஓ.பி.எஸ்., தினகரனை சந்தித்தை அ.தி.மு.க., தொண்டர்கள் 95% பேர் வரவேற்று உள்ளனர்.  


சசிகலா, தினகரனை அன்றைய தினம் எதிர்த்து வெளியில் வந்தது அரசியல். ஆனால் தற்போது ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு என்பதால் இணைந்துள்ளோம். காலில் விழுந்து பதவிக்கு வந்தவர்களை, இ.பி.எஸ்., சூரியனை பார்த்து நாய் குறைப்பது போன்ற வார்த்தையால் பேசி வருகிறார்.  


இ.பி.எஸ்., பதவி மோகத்தால் அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கிறார். அ.தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது. இ.பி.எஸ்.,சை தவிர்த்து விட்டு அ.தி.மு.க., ஒன்றுபடும். ஓநாய் கூடாரத்தில் உள்ள ஆட்டுக்குட்டிகள் எல்லாம் எப்போது வெளியில் வரலாம் என காத்துக் கொண்டிருக்கிறது.  ஜெயக்குமார் விளையாட்டு பிள்ளை அவரைப் பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.


சசிகலாவை சந்தித்த பிறகு, ஆங்காங்கே பிரிந்து இருப்பவர்களை  ஒன்று சேர்த்து, வரும் 2026ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். தற்போதுள்ள ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதால், மீண்டும் அந்தத் திட்டத்தை செயல்படுத்த அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்காக ஒன்றிணைகிறோம். அரசியலில்,இன்று ஒன்று நடக்கலாம்,நாளை ஒன்று நடக்கலாம்,நாளை நடப்பது எங்களுக்கு நல்லதாகவே நடக்கும்  இவ்வாறு அவர் தெரிவித்தார்.