அதிமுகவின் ஒற்றை தலைமை முடிவுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்குவோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அழுத்தம் கொடுத்ததாக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 23 ஆம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் பல எதிர்பாராத திருப்பங்களுடன் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில்  23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு தீர்மானங்களை முன்மொழிய, அதனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிவதாக தெரிவித்தார்.


ஆனால் அதன்பின் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான சி.வி.சண்முகம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேறினால் மட்டுமே மற்ற தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். 


மீண்டும் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் கட்சி இரண்டாக உடையுமோ என்ற அச்சத்தில் தொண்டர்கள் உள்ளனர். இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளரான தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஜெயதேவி கடந்த இரு தினங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமிஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இப்படி பலரும் அணி மாறி ஆதரவு தெரிவித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு எங்கிருந்து இவ்வளவு ஆதரவு கிடைத்தது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது. 


இந்நிலையில் ஜெயதேவி நேற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மன்னிப்பு கேட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் பதவிக்கு வந்தவுடன் ஆதரவு தெரிவிக்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்குவோம் என மாவட்ட செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் மூலமாக தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறினார். 


மேலும் ஓபிஎஸ் டெல்லியில் இருந்து வரும் வரை மன நிம்மதி இல்லாமல் இருந்ததாகவும், இப்போது விமான நிலையத்தில் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் ஜெயதேவி கூறியுள்ளார். இதனால் பதவியை தக்க வைக்க அனைத்து விதமான உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அழுத்தம் கொடுத்தது உண்மையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண