ஆறு மாதங்களில் பெட்ரோல் விலை ரூ. 150ஐ தொடும் நிலையை மோடி உருவாக்குவார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடியுள்ளார். மேலும் புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.


புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி  வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பதாவது:


பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். அதை போல் தற்போது நிலை உருவாகியுள்ளது. இன்னும் 6 மாதங்களில் பெட்ரோல் 150 ரூபாய்க்கும், கேஸ் விலை 1250 ரூபாய்க்கும், டீசல் விலை 140 ரூபாய்க்கும் விற்பனையாகும் நிலை வரும். மக்கள் மோடி அரசை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் 150 ரூபாயை தாண்டும் சூழலை மோடி உருவாக்குவார். பிரசார் பாரதி அமைப்பானது அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், வரலாற்றின் சாட்சியங்கள் என்ற ஆவணங்களை பெட்டகத்தில் வைத்துள்ளனர். அதை வெளியில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கிறார்கள். இது இமாலய தவறு.




சட்டப் பேரவை முடிந்து 2 மாதங்களாகியும் எக்கோப்புகளும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை. அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவில்லை. பாப்ஸ்கோ தீபாவளி பஜார் எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை. நிதியை கையில் வைத்திருந்து அறிவித்திருக்க வேண்டும். புதுச்சேரி அரசு ஸ்தம்பித்துள்ளது. நிதியில்லாததுடன் வருவாயை பெருக்கவில்லை. ஜிஎஸ்டி ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்து விடும். இழப்பீடு அதன் பிறகு கிடைக்காது. 1250 கோடி ரூபாய் வர வேண்டிய நிதி கிடைக்காமல் போவதால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.


உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் வந்துள்ளதால் திட்டங்களை நடைமுறைப் படுத்தப்படவில்லை என்ற கருத்து உண்மையில்லை. அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தடை ஏதும் இல்லை. மக்களை மாநில அரசு ஏமாற்ற கூடாது. பஞ்சாலைகளை திறக்க ஆயத்த வேலையே நடக்கவில்லை. அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் முதல்வரால் எடுக்கப்படவில்லை. புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. எந்த வேலையும் நடக்கவில்லை. தேர்தல் ஆணையருக்கு தேர்தல் நடத்திய அனுபவம் இல்லை. நீதிமன்ற தடை இருப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை விலக்க வேண்டும். இதில், சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், தேர்தல் ஆணையரை சந்தித்துள்ளார். அதற்கு அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை என கூறி உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது குறிபிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண