அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி வியூகத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.


களேபரமான கள ஆய்வுகள் – அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி


பொதுக்குழுவிற்கு முன்பே அதிமுக கட்சிக்குள் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனைகளை களைய நினைத்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் மூத்த முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினை ஏற்படுத்தி கள ஆய்விற்காக அனுப்பிவைத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி நிர்வாகிகளுக்குள் ஒற்றுமையை உண்டாக்குவதற்குப் பதிலாக பிரச்சனையை மேலும் மேலும் வளர்ப்பதாகவே அந்த கள ஆய்வுகள் அமைந்தன.


உட்கட்சி பூசல், அடிதடி அரசியல் ; ரத்து செய்யப்பட்ட கள ஆய்வு கூட்டங்கள்


திருச்சி, நெல்லை, மதுரை , கும்பகோணம் என எங்கு சென்றாலும் நிர்வாகிகளின் உட்கட்சி பிரச்சனையால் வாக்குவாதம் தொடங்கி, கைகலப்பு, அடிதடி என சண்டையே நடைபெற்றது. சேலத்தில் நடந்த கள ஆய்வு கூட்டத்தில் பிரச்னை வந்துவிடுமோ என எண்ணி, பழனிசாமியே கூட்டத்தில் கலந்து கொண்டார். இப்படியே கள ஆய்வினை செய்தால் அதிமுக கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பிரச்சனை பெரிய அளவில் வெடித்து அது எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையையே கேள்விக்குள்ளாக்கும் நிலையை உருவாக்கிவிடும் என்பதால் உடனடியாக கள ஆய்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடத்தினை கூட்டுவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.       


எடப்பாடி முகத்தை இருளாக்கி கேபி.முனுசாமி பேச்சு


இந்த பொதுக்குழுவில் எந்தவித அசம்பாவிதங்களும், எதிர்க்கருத்துகளும் வந்துவிடாத படி பார்த்து கொண்டார்கள். தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டுமே சிறப்பு அழைப்பாளர்கள் பிரிவில் பொதுக்குழுவுக்கு அழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல அதிமுக பொதுக்குழுவும் பெரிய சச்சரவுகள் இன்றி நடைபெற்று முடிந்தாலும் அதிமுக பலவீனமாக உள்ளதை கே.பி.முனுசாமி வெளிப்படையாகவே போட்டு உடைத்துவிட்டார்.


கே.பி.முனுசாமி பேசும் போது “அதிமுக, ஆட்சியில் இருந்த போது பலன் பெற்று பணம் சம்பாதித்தவர்கள் தற்போது மனமுவந்து கட்சிக்காக பணம் செலவழிக்க வேண்டும், போராட்டத்திற்கு வருபவர்வகளுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டார். இது மறைமுகமாக மூத்த முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் கட்சிக்காக பணம் செலவழிப்பதில்லை, அதனால் கட்சி பலவீனமாக உள்ளது என்பதை வெளிப்படுத்திவிட்டது என்பதை மனதில் வைத்து அவர் பேசியது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


”கடன் வாங்கியாவது செலவு செய்யுங்கள்” தவிப்பில் அதிமுக ?


‘’கடன் வாங்கியாவது தேர்தல் களத்தை சந்தியுங்கள்’’ என பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேசியதை நிர்வாகிகள் ரசிக்கவில்லை. ’’நிர்வாகிகள் நியமனத்திற்கு கோடிகளில் பணத்தை வாங்கி போஸ்டிங் போடும் ஆடியோ வெளியான விவகாரத்தில் சிக்கிய, கே.பி.முனுசாமி எங்களை கடன் வாங்க சொல்ல எந்த அருகதையும் இல்லை’’ என பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்களே கொந்தளித்துள்ளனர்.


பாஜகவுக்கு மீண்டும் சாமரசம் வீசுகிறாரா எடப்படி பழனிசாமி?


அதிமுக பொதுக்குழுவில் பாஜக வை கடுமையாக எதிர்த்து பேசுவார் எடப்பாடி பழனிச்சாமி,  அப்போதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும் என எதிர்பார்த்து காத்திருந்த அதிமுக தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், அதில் ஆளும் திமுக அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்த அதிமுகவோ, மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக ஒருவார்த்தை கூட வந்துவிடாதபடி கவனமாக கையாண்டுள்ளார்.  தீர்மானங்களில் கூட மத்திய அரசுக்கு வெறும் வலியுறுத்தலை மட்டுமே தெரிவித்துள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


EPS நிலைபாடு என்ன ? மீண்டும் டெல்லிக்கு தூதா?


எதனால் இந்த நிலைப்பாடு என்று அதிமுக வின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரிக்கும் போது “ எங்கள் பொது செயலாளர் 2026 தேர்தலுக்கு வலிமையான கூட்டணியை அமைப்பார் . அதில் எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு பாஜக வந்தால் அதை பரிசீலனை செய்யலாம் என்ற முடிவிற்கு எடப்பாடியார் வந்திருக்கிறார் என்றும், எங்களுக்கு அண்ணாமலையுடன்தான் பிரச்சனையே தவிர பாஜகவின் மத்திய தலைமையோடு அல்ல” என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.


பாஜகவோடு சேர்ந்தால் மீண்டும் தோல்வியை மிஞ்சும் – தொண்டர்கள் கவலை


ஆனால், பொதுக்குழுவிற்கு வெளியே நின்றிருந்த சாதாரண நிர்வாகிகளும் தொண்டர்களும், “பாஜகவோடு கூட்டணி வைத்ததால்தான் தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வந்தோம் தமிழ்நாட்டு மக்கள் நம்மீது வைத்திருந்த நம்பிக்கையையும் இழந்தோம், இப்போது மீண்டும் பாஜகவோடு நெருக்கம் காட்டுவது அதிமுக வை வீழ்ச்சியடையவே செய்யும்” என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் .


விஜய் கூட பரவாயில்லை. மணிப்பூர் பற்றி சத்தமே இல்லையே ? தொண்டர்கள் கேள்வி


புதிதாக கட்சி தொடங்கிய விஜய் கூட மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பேசுகிறார். ஆனால், அதிமுக பொதுக்குழுவில் அதை பற்றி ஒருவார்த்தை கூட இல்லை. அதேபோல இஸ்லாமிய மக்களை அவதூறாக பேசிய நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்தை ராஜ்யசபாவில் கொண்டு வருவதற்கு ஆதரவான கடிதத்தில் கூட கையெழுத்திட அதிமுக மறுத்துள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் கோகுல இந்திராவோ "மத்திய பாஜக அரசு கொண்டுவர இருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்கிறோம்" என வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.


வேறு வழியில்லை என்று சொல்லிவிட்டு, பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா?


இந்த அரசியல் நகர்வுகள் பற்றி மூத்த பத்திரிகையாளர்களிடம் கேட்கையில் “எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வழி கிடையாது, அவர் பாஜகவை எதிர்க்கிறேன் என்பதெல்லாம் சும்மா. தொண்டர்களை சமாதானம் செய்வதற்காக சொல்வது. உண்மையிலே அவரால் மத்திய பாஜக அரசை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேச முடியாது, கொஞ்சம் பாஜகவிற்கு எதிர்ப்பு என பேச்சு எழுந்தவுடனே எடப்பாடி பழனிச்சாமியின் வலது கையான சேலம் இளங்கோவன் இடத்திலேயே அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.


அது நேரடியாக எடப்பாடிக்கு கொடுக்கபட்ட எச்சரிக்கைதான். பிறகு அவர் எப்படி பாஜகவிற்கு எதிராக செயல்படுவார்? அதைத்தான்  இந்த பொதுக்குழு தீர்மானமும் நமக்கு தெளிவாக சொல்கிறது. பாஜகவை எதிர்க்க வேண்டுமென்றால் அசாத்திய தைரியம் வேண்டும் அது எடப்பாடி பழனிச்சமிக்கு கிடையவே கிடையாது. நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் தெரியும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அதிமுக அமைச்சர்கள் அண்ணாமலையை தான் எதிர்க்கிறார்களே தவிர பாஜகவை அல்ல.


இதுவரை பாஜகவின் தேசிய தலைமையையோ , பிரதமர் மோடியையோ எதிர்த்து ஒரு வார்த்தை கூட அதிமுகவின் தலைமை பேசியது இல்லை. இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பேசும்போது கூட அண்ணாமலை கூறுவது போல பாஜக வளரவில்லை கடந்த 2014 லை விட குறைவான வாக்கு சதவிகிதம்தான் பாஜக வாங்கியது என குறிப்பிட்டார். பாஜக மேலிடத்திற்கு அண்ணாமலை பொய் சொல்கிறார் என்ற தகவலை சொல்லத்தான். 2021 தேர்தலை போல 2026 தேர்தலையும் பாஜகவோடு இணைந்து அதிமுக சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். அதற்காக மேல்மட்ட தலைமைக்கு கொடுக்கப்பட்ட மறைமுக சிக்னல்தான் இந்த பொதுக்குழு கூட்டமே” என்றார்கள்.


தினகரன் மூலம் பாஜக பதில்


அதிமுகவின் இந்த மறைமுக கூட்டணி அழைப்பிற்கு அமமுக பொது செயலாளர் டி. டி. வி தினகரன் மூலம் பதில் சொல்லி உள்ளது பாஜக. ’’எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணிக்கு வரவேண்டும். அப்போதுதான் அதிமுகவை காக்க முடியும்’’ என அவர் பேசி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து பயணிக்க விரும்பாத டிடிவி தினகரனின் இந்த அழைப்பும் அரசியலில் கவனிக்க வேண்டியதாகவே உள்ளது.   


இன்னும் தேர்தலுக்கு 15 மாதங்கள் உள்ள நிலையில் அதிமுக கூட்டணிக் கணக்குள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைகொடுத்து அதிமுகவை கரைசேர்க்குமா? இல்லை அதிமுகவை மூழ்கடிக்குமா ? என்பது சட்டமன்ற தேர்தலின் போது தெரியவரும்.