ADMK Case LIVE : ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் - இபிஎஸ் வசமான அதிமுக: தொண்டர்கள் உற்சாகம்

ADMK Case LIVE updates: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட இருக்கிறது.

ABP NADU Last Updated: 23 Feb 2023 05:51 PM
ADMK Case LIVE : ஓ. பன்னீர்செல்வம் - மிட்டல் சந்திப்பு!

தேனியில் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த மிட்டல் நட்பு ரீதியாக சந்தித்துள்ளார்.

இரட்டை இலை இன்னும் பலவீனம் அடையும் - டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி  தரப்பிடம் இரட்டை இலையை கொடுத்தாலும் அது சோபிக்காது. அது இன்னும் பலவீனம் அடையும். வருங்காலத்தில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்தால் தான் திமுக என்னும் தீயசக்தியை வீழ்த்த முடியும்” என தெரிவித்துள்ளார்.


மேலும், “இரட்டை இலை கிடைச்சிடுச்சின்னு ஈரோடு கிழக்குல எடப்பாடி பழனிசாமி தரப்பு வெற்றி பெற முடியுமா? . ஏற்கனவே இரட்டை இலையோட சட்டமன்ற தேர்தல்ல ஆட்சி அதிகாரம், பண பலத்தோட போட்டியிட்டப்போது கூட ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.இது எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்காலிகமான வெற்றி தான்” எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தர்மத்தின் பக்கம் தீர்ப்பு : திண்டுக்கல் சீனிவாசன்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா உருவமாக எடப்பாடியை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். கடவுள் எங்களுடன் இருக்கிறார். தர்மம் எங்களுடன் இருக்கிறது. தெருத்தெருவாக மக்களின் நாடியை பிடித்து பார்த்துள்ளோம். குறைந்தது 50 ஆயிரம், அதிகபட்சமாக ஒரு லட்சம் வாக்குகள் வெற்றி பெறுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு..!

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தர்மம் வென்றது, ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைந்திருக்கிறது - கேபி முனுசாமி

தர்மம் வென்றது. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி நடத்திய தர்மயுத்தம் வெற்றி அடைந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒன்றரை கோடி தொண்டர்களின் உள்ளம் குளிர்ந்திருக்கிறது - கேபி முனுசாமி

அதிமுக பீடுநடை போடும் : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் அதிமுக பீடுநடை போடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ஈபிஎஸ் வசமானது அதிமுக..!

ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என்ர உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஈபிஎஸ் வசமாகியுள்ளது அதிமுக.

அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்..!

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பையடுத்து சென்னை தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

அதிமுக பொதுக்குழு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்தது. 

அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வாசிப்பு..!

அதிமுக வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பை வாசித்து வருகின்றனர். 

அதிமுக பொதுக்குழு வழக்கு - சற்று நேரத்தில் தீர்ப்பு

ஜூலை 11 அன்று எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அப்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அந்த பொதுக்குழுவே செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. 


இதையடுத்து பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. 

ADMK Case Live : அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வர உள்ளதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைப்பாளராக தொடர்வாரா ஓபிஎஸ்..?

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை டிவிஷன் பெஞ்ச் ஏற்றுக்கொண்டது.


பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். திரு. குமார் தனது வாடிக்கையாளர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகத் தொடர்கிறார் என்றும் அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் 2026 டிசம்பரில் மட்டுமே முடிவடையும் என்றும் கூறினார்.

இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..! யாருக்கு அதிமுக..?

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது.

Background

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது. 


எடப்பாடி தலைமையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.


இதில், இரு தரப்பு வாதங்களும் நீதிபதிகள் முன்பு வைத்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தடையையும் உச்சநீதிமன்றம் நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 2023ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதிக்கும், அதன் பின்னர் ஜனவரி 9ஆம் தேதிக்கும், வழக்கினை மீண்டும் ஒத்திவைத்தது. கடந்த 16ஆம் தேதி இரு தரப்பையும் எழுத்து பூர்வமான பதிலை கேட்டனர்.


இந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தான் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் இருக்கப்போகிறது என்பதால் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  கட்சி யாருக்கு என்பது தெளிவானால் தான் சின்னம் யாருக்கு என்பது தெரியவரும்.


என்ன நடந்தது..? 


இபிஎஸ் தரப்பு கடந்த  ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்த பொதுகுழு நடந்து கொண்டு இருக்கையில் ஓபிஎஸ் தரப்பினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களைக் கைப்பற்றினர். இதனால் பெரும் அரசியல் பதற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டது. அதன் பின்னர் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் முதலில் பொதுக்குழு செல்லாது எனவும், அதன் பின்னர் செல்லும் என இரு வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டது. 


அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  டிசம்பர் 6-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகள் மீது தேர்தல் ஆணையம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப்பணிகளை சீராகச் செய்யமுடியவில்லை, எனவே தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையத்தினை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க முடியாது என ஒபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.


ஓபிஎஸ் தரப்பு:


இந்த வழக்கின் தொடக்கத்தில், அதிமுக-வின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமிக்க முடியும் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், ஆனால் அது கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டது.  அடுத்த விசாரணை வரும் வரை, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இபிஎஸ் தரப்பு:


அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் தேர்வு செய்துள்ளதாக  2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள், தங்களது ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்கியிருந்தனர். இந்நிலையில் வழங்கப்பட்ட கடிதங்களை, தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் தரப்பு சமர்பித்தது.


டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம், உறுப்பினர்களின் கடிதங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பின் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் சமர்ப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு  எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.


இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தால், ஓபிஎஸ்-க்கு அதிமுகவிற்கு சம்பந்தம் இல்லாமல் போய்விடும். அப்படி இல்லையெனில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் ஈபிஎஸ்-க்கு அதிமுகவும் சம்பந்தம் இல்லாமல் போய்விடும். எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் இன்று யாருக்குதான் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளில்தான் உள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.