அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம். அதிமுக சண்டைக்கும், திமுக கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. எதற்கெடுத்தாலும் முதலமைச்சரையும், திமுகவையும் தாக்கி பேசுவது இபிஎஸ்க்கு வாடிக்கையாகி போய்விட்டது. யார் மீதோ உள்ள கோபத்தை திமுகவின் பக்கம் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்தார். 


முன்னதாக காயம்பட்ட அதிமுக தொண்டர்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் எங்களுக்கு நாளுக்குநாள் பல தகவல் கிடைத்தது. மாநகரத்திலே சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகின்ற பொழுது அனைந்திந்திய அண்ணா திராவிட கழக தலைமை கட்சி அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் உள்ளே வர இருப்பதாக செய்தி வந்தவுடன் எங்களுடைய கட்சி நிர்வாகி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சமூக விரோதிகள் அத்துமீறி தலைமை கழகத்தில் உள்புகுந்து தாக்குதல் நடத்தியபோது தடுத்து நிறுத்தினர். 


முழுமையான பாதுகாப்பு காவல்துறை கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அதற்கு பிறகு தொடர்ந்து எங்களுக்கு தகவல் கிடைத்து கொண்டு இருந்தது. சமூக விரோதிகள் தலைமை கழகத்தில் புகுந்து தாக்குதல் நடத்த கூடும் என தெரிந்து காவல் ஆணையர் வரை புகார் அளித்தோம். 


ஆனால், இன்று எங்களுக்கு கிடைத்த தகவல் உண்மை என்று நிரூபணமாகிவிட்டது. நாங்கள் உரிய புகார் அளித்தும் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கபடவில்லை. அதோடு இன்று பொதுக்குழு கூட்டதிற்கு பிறகு முன்னாள் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அத்துமீறி உள்ளே நுழைந்தது மட்டுமில்லாமல், ரவுடிகளை அழைத்து வந்து கட்சி கார்களை அடித்து நொறுக்கினார். இந்த சம்பவம் வேதனையானது, கண்டிக்கத்தக்கது. 


எந்தவொரு கட்சி தலைவராவது கட்சி நிர்வாகிகளை தாக்குவாரா..? அப்படி தாக்கும்போது அந்த தலைவரின் மனம் எப்படி நோகும். அதை எப்படி தடுக்க வேண்டும். அதற்கு மாறாக இவர்களை எல்லாம் முதலமைச்சராக்கிய, இவரை எல்லாம் துணை முதலமைச்சராக்கிய, இவருக்கு ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு கொடுத்து அதற்கு இன்றைய தினம் தகுந்த வெகுமதியை கொடுத்துவிட்டார். 


மனசாட்சி இல்லாத, மிருகத்தனமான எண்ணம் கொண்டவருக்குதான் இந்த எண்ணம் வரும். ஒரு சுயநலவாதி என்றே சொல்லலாம். ஓபிஎஸ் அவர்கள் பொதுக்குழு கூட்டத்தில்  கலந்துகொள்வார் என்று நினைத்தோம். அதற்காக அவருக்கு தனி இருக்கை எல்லாம் போட்டு இருந்தோம். ஆனால், அவர் வரவில்லை. அதுமட்டுமில்ல, மீன்பாடி வண்டிகளில் ரவுடிகளை அழைத்து வந்து கற்களை கொண்டு கழக நிர்வாகிகளான சுமார் 4000 பேர் மீது தாக்குதல் நடத்தினார். 


அதோடு காவல்துறையும் ரவுடிகளுடன் இணைந்து எங்களது மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் தாக்கியது மிக மிக கொடுமையானது. ஓபிஎஸ் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியும் இணைந்து இந்த கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். 


அதிமுகவை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் துரோகிகளுடன் இணைந்து இந்த காரியத்தை செய்துள்ளனர். கழகத்தை பாதுகாக்க நிர்வாகிகள் இன்று அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். அத்தகைய தாக்குதல் நடைபெறாமல் இருந்தால் சிறந்த முதலமைச்சர் என்று நாங்களே பாராட்டி இருப்போம். 


துரோகி ஓபிஎஸ் அவர் ஒரு நாளும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவில்லை. அவர் ஒரு சுயநலவாதி, தனக்கு கிடைக்காத பதவி வேறு எவருக்கும் கிடைக்க கூடாது என்று நினைப்பவர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க பாடம் புகட்டுவோம்” என்று தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண