சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர். 


இதனிடையே இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழுவுக்கு மஞ்சள் வேட்டி வெள்ளை சட்டையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  வருகை தந்துள்ளார். 






இதற்கிடையில் நிகழ்ச்சி நடைபெறும் வானகரத்தில் சாலையின் இருபுறமும் தொண்டர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் தனது காரில் புறப்பட்டார். அதேபோல் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சார வாகனத்தில் வானகரம் நோக்கி புறப்பட்டார். வழியில் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்ற நிலையில் இருவரின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. 


இதனைத் தொடர்ந்து உடனடியாக மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முதலில் வந்தார். ஆனால் அவருக்கு தொண்டர்களின் வரவேற்பு என்பது மிகக்குறைவாகவே காணப்பட்டது. ஆனால் தொண்டர்களின் கூட்டத்தில் சிக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு அவர் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்தார். 






அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையோடு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அந்த இடமெங்கும் எடப்பாடியார் வாழ்க என்ற கோஷம் விண் அதிர எழுப்பப்பட்டது. தொண்டர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் மேடைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதிமுகவில் அவருக்கான செல்வாக்கை காட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.