சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகமான பரபரப்புடன் முடிவடைந்தது. அதிமுக தலைமை வலிமையாக இல்லை என்று இராமநாதபுரம் முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜாவின் கருத்துக்கு, சிவி சண்முகம் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் கடுமையான முறையில் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன.
இதற்கிடையே, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மரகதம் குமரவேல் அவர்களின் உறவினர் சுரேஷ் என்பவரை இலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளராக நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த கூட்டத்தில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வழிகாட்டுதல் குழு தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக- எனும் பேரியக்கத்தை வழிநடத்தும் அதிகாரம் படைத்த ஒன்றாக வழிகாட்டுதல் குழுவை மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம், வழிகாட்டுதல் குழு அமைப்பதை தனது நிபந்தனைகளில் ஒன்றாக வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, திருப்பூரில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தில், மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைத்தார். ஒ.பி.எஸ் பிரிவின் தீவிர ஆதரவாளராக இருந்துவந்த இவர், அதிமுகவின் வழிகாட்டு குழுவிலும் இடம்பெற்றிருந்தார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.
பாஜகவில் இணைந்த மாணிக்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அம்மாவின் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற முக்கிய காரணமாக இருந்தவர் பாரத பிரதமர் மோடி. அம்மாவின் அன்பை பெற்றவர். அம்மாவுக்கு மிகவும் பிடித்த நபர் மோடி. அதனால் தான் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக கட்சியுடன் இணைந்ததாக சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vedha Nilayam: ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!