கரூர் 80 அடி சாலை பழனியப்பா தெருவில் உள்ள கரூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கரூரில் மற்றும் சென்னை இல்லம் உள்ளிட்ட பல இடங்களிலும் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை துவங்கி உள்ளதை காட்டுகிறது.
எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முறையாக ஆவணங்களை சரிபார்த்து வழங்கியுள்ளனர். எந்த ஆவணமும் சிக்கவில்லை. எடுக்கப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது. பொய் வழக்குகள் போட்டு, நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்து கரூரில் கட்சி மாற்றும் நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. கட்சித் தலைமையின் ஆலோசனையின் படி நாங்கள் எந்த வழக்குகளையும் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம்.
சென்னை மற்றும் கரூரில் எனக்கு சொந்த வீடு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனக்கு சொந்த வீடு கிடையாது. வாடகை வீட்டிலேயே வசித்து வருகிறேன். ஆனால், பல ஆண்டுகளாக கரூரில் பல்வேறு தொழில்களை செய்தி வருகிறேன். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். பத்திரிக்கை செய்திகள் மூலம் பொய்யான தகவல்கள் பரப்ப படுகிறது. அதற்காக வழக்கு தொடரப்படும்.
கொரோனா தொற்று முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகமான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் அரசியல் தலையீடு உள்ளது. டோக்கன் முறையில் ஆளுங்கட்சியினர் மூலமாக முறைகேடு நடக்கிறது. ரேசன் கடைகளிலும் இதே நிலை. திமுகவின் அராஜக போக்கு பற்றி மக்கள் நன்கு அறிவார்கள். மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
போக்குவரத்து துறையில் தொழிற் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் என்று பாராமல் பல இடமாற்றங்கள் நடந்துள்ளது. அனைத்து துறைகளிலும் இது நீடிக்கிறது. ஊராட்சிகளில் பணித்தள பொறுப்பாளர்கள் வரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், வங்கி லாக்கர்கள் சோதனை செய்யப்படுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இல்லை என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.
இதற்கு முன்பதாக கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கழக நிர்வாகிகளுடன் கரூர் சட்டமன்ற 4 தொகுதிகளும் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது ஆலோசனையை வழங்கினா். பின்னர் அதிமுக மகளிர் அணியினர் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஏஆர் காளியப்பன், மத்திய நகரச் செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு நகரச் செயலாளர் விசிகே ஜெயராஜ், மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுக சார்பில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.