பரபரப்பான சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். தீர்மானக்குழுவினர் ஆலோசனை நடந்து கொண்டிருந்த போது, திடீரென ஓபிஎஸ் அங்கு வந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுது. தீர்மானத்தில் என்ன அம்சங்கள் இருக்கிறது என்பதை அறியவே அங்கு ஓபிஎஸ் வந்ததாக கூறப்படுகிறது. ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளதா என்பதையும் ஓபிஎஸ் ஆய்வு செய்தார்.
இதை அங்குள்ள நிர்வாகிகள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், தீர்மானத்தை பார்வையிட்ட ஓபிஎஸ், அங்கு ஆலோசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டார். தனது இல்லத்தில் இபிஎஸ் , தனது ஆதரவாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் எண்ட்ரி ஆனது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், 12 பேர் கொண்ட தீர்மான ஆய்வுக் குழுவின் செயல்பாடுகளை அறிய வந்த ஓபிஎஸ், ஒற்றைத் தலைமை கருத்தை முதன் முதலில் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடிந்து கொண்டதாககூறப்படுகிறது.
ஓபிஎஸ் அங்கிருந்து சென்ற பின், செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இதோ அந்த பேட்டி:
‛‛தொண்டர்களின் மனநிலையை மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நான் போட்டு உடைத்தது சிதம்பர ரகசியம் இல்லை. நான் சொன்னது, கீழ் மட்டத் தொண்டன், கண்ணுக்கு தெரியாமல் கீழே இருந்து கட்சியை வழிநடத்தும் தொண்டனின் உணர்வை தான் எண்ணத்தை தான் நான் வெளிப்படுத்தினேன். அது தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிரொலித்தது. அதை தான், வெளியே வந்து நான் கூறினேன். இது வெளிப்படையாக எல்லாருக்கும் தெரிந்த ஒன்று,’’ என்று ஜெயக்குமார் பேட்டியளித்த போது,
‛‛ஒற்றைத் தலைமை விவகாரத்தை பேட்டியளித்ததற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறார்களா?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார்,
‛‛என்மேலயா... என் மேலயா... இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுறவன் ஜெயக்குமார் இல்லை. நான் அடிமட்ட தொண்டனாக இருந்து, கட்சியிலும், ஆட்சியிலும் எவ்வளவோ பொறுப்புகளை எனக்கு வழங்கி ஜெயலலிதா அழகு பார்த்தார். எனவே எனக்கு எந்த பதவி வெறியும் கிடையாது. அடிமட்ட தொண்டனாக இருந்து, தொண்டர்களை காக்கும் வேலையை, திமுகவின் அவலநிலையை எடுத்துரைக்கும் நபராக நான் இருப்பேன். அதனால இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்லை.
மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஒட்டுமொத்தமான நிர்வாகிகளின் கருத்தை தான், நான் வெளியே வந்து சொன்னேன். ஒத்தையா, இரட்டையா என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். அதை முடிவு செய்ய கட்சியில் மூத்த நிர்வாகிகள் இருக்கிறார்கள். அதை தீர்மானிக்கும் சக்தி ஜெயக்குமார் இல்லை.
தீர்மானத்தை செயல்வடிவம் தரும் 12 பேர் கொண்ட குழு தான் இன்ற ஆலோசித்தது. அப்போது அண்ணன் ஓபிஎஸ் வந்து பங்கு கொண்டார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் வரவில்லை என்று கேட்க முடியாது. அதிமுக பெருந்தொண்டர்களை கொண்ட பேரியக்கம்,’’
என்று அப்போது ஜெயக்குமார் பேட்டியளித்தார்.