சட்டமன்ற தேர்தலில் தோல்வி, உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி, சசிகலா கொடுக்கும் குடைச்சல், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் ரெய்டு என அதிமுகவிற்கு பல திசைகளில் பிரச்னை ஏற்பட்டு வரும் நிலையில், சோர்வடைந்து இருக்கும் அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார்.


தீபாவளி பண்டிகைக்கு பிறகு மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, பயணத்தை தனது சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து தொடங்க  திட்டமிட்டிருக்கிறார்.


அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என கல்வெட்டு திறந்து, மடல் எழுதி, பேட்டிக் கொடுத்து பிரகடனப்படுத்தி வரும் சசிகலா, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன், தொண்டர்களை சந்திப்பேன் என சொல்லி வரும் நிலையில், அவருக்கு முன்னதாக தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி, தொண்டர்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்க வியூகம் வகுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கியது முதல் தற்போது வரை வேறு கட்சிக்கு செல்லாமல் அதிமுகவிலேயே தொடர்ந்து நீடித்து வரும் மூத்த உறுப்பினர்களை தொகுதி வாரியாக கண்டறிந்து, அதிமுகவின் பொன்விழாவையொட்டி அவர்களை அங்கீகரித்து பாராட்டு செய்யவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்திருக்கிறது. மாவட்டம் வாரியாக நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மூத்த உறுப்பினர்களுக்கு தங்கக்காசு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவம் பொறித்த தங்க நாணயம், பதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவை அடங்கிய ‘பொற்கிழி’ விருது வழங்கி கவுரவிக்கவும் எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார்.


தொண்டர்களை தனது சுற்றுப்பயணத்தின் மூலம் உற்சாகப்படுத்துவதுடன், அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இந்த சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். சசிகலாவிற்கு எதிராக தீவிரமான நிலைபாடு எடுக்காத ஒ.பன்னீர்செல்வத்தை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டவும், அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக தான் உருவெடுக்கவும் இந்த பயணம் தனக்கு கைக்கொடுக்கும் என நம்பும் பழனிசாமி, தனி ஆவர்த்தனம் செய்யும் அதிமுக நிர்வாகிகளை தன்பக்கம் கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறார்.


ஏற்கனவே, அதிமுகவில் இருக்கும் இரட்டை தலைமையால் நிர்வாகிகள் மத்தியிலும் தொண்டர்கள் தரப்பிலும் கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், அறிக்கைகள், பேட்டிகள், சந்திப்புகளை கூட ஒபிஎஸ் – ஈபிஎஸ் தனியாக நடத்திவரும் சூழலில், ஒபிஎஸ் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ள இந்த  சுற்றுப்பயணம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை நான் தான் என்பதை காட்டுவதாக இருக்கும். இந்த சுற்றுப்பயணத்திற்கு பிறகு அதிமுவில் அதிரடியாக பல மாற்றங்கள் நடக்கவுள்ளது..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண