அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படவிருக்கிறது.



எடப்பாடி பழனிசாமி


தேர்தல் பணிகளை துரிதப்படுத்த முடிவு


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலமையில் புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவே நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனத்தில் சொதப்பல் ? கடுப்பில் எடப்பாடி !


அதோடு, பூத் கமிட்டிகளை விரைவாக நியமித்து தேர்தல் வேலைகளை மாவட்ட செயலாளர்கள் மூலம் முடுக்கிவிடவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே, பூத் கமிட்டிகள் அமைத்து அதன் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களாக 82 பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல மாவட்டங்களில் பூத் கமிட்டிகள் சரியாக அமைக்கப்படாமல் இருப்பதாகவும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனத்தில் குளறுபடிகள் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்து அவர் இன்று கண்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மூத்த நிர்வாகிகளாக உள்ள மாவட்ட செயலாளர்கள் சரிவர ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி இன்று விசாரணை நடத்துகிறார். பொறுப்பாளர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி அனலை கக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 எடப்பாடி-க்கு கட்டுப்படாத மூத்த நிர்வாகிகள் ?


எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டாலும் இதற்கு முன் அவருடன் ஒன்றாக பயணித்த நிர்வாகிகளும், அவருக்கு முன்னரே அதிமுகவில் பெரிய பதவிகளை வகித்த மூத்த நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி போட்டும் உத்தரவுகளை கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருவது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


குறிப்பாக மாவட்ட செயலாளர்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் தங்களது மாவட்டத்தில் தனி ஆவர்த்தனம் செய்துவருவதாகவும் தனிப்பட்ட கூட்டங்களில் பொதுச்செயலாளர் நடவடிக்கைகளையே விமர்சித்து  பேசி வருவதாகவும் வெளியான தகவலால் எடப்பாடி பழனிசாமி கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நிர்வாகிகள் மத்தியில் கடுமையான முறையில் நடந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாகவும் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மாற்றப்படும் மாவட்ட செயலாளர்கள் ?


தனக்கு கட்டுப்பட்டு செயல்படாத மாவட்ட செயலாளர்களுக்கு நாளை நடைபெறும் கூட்டத்தில் கடும் எச்சரிக்கை விடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் தொடர்ந்து இதேபோன்று செயல்பட்டால் தயவு தாட்சண்யம் இன்றி மாவட்ட செயலாளர்கள் பொறுப்புகள் பறிக்கப்படும் என்றும் அவர் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பல நிர்வாகிகள் வயிற்றில் இன்றே புளி கரையத் தொடங்கியிருக்கிறது.


ஓபிஎஸ் இன்றி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் எடப்பாடி


 அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்-சை கட்சியை விட்டே நீக்கியும் அவர் அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் பெற்று தனது வியூகத்தில் வெற்றி பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தனிப்பெரும் தலைவராக இருந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறார். அதிமுக பொதுச்செயலளார் ஆனபிறகு வரும் முதல் பெரிய தேர்தல் என்பதால் குட்டிக்கரணம் போட்டாவது இந்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அப்போதுதான் தன்னுடைய தலைமையின் மீது நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாக குடி கொண்டிருக்கிறது.


மாவட்ட செயலாளர்கள் மூலமாகவே தேர்தல் களத்தில் வெற்றியை பெற வேண்டும் என்பதால் அவர்களை துரிதப்படுத்தவே நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.


கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிகாரம் ?


 அதிமுக தலைமையிலான கூட்டணியை உருவாக்குவதிலும் எந்த கட்சியை சேர்த்துக் கொள்ளலாம் எந்த கட்சி வேண்டாம், யாரை அணுகலாம் என்ற கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


அதே நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்க மூத்த நிர்வாகிகள் கொண்ட குழுவை அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.