காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி, அரண்செய் என்கிற இணையதளத்திற்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தனது கூட்டணி கட்சியான திமுகவையும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு தலைமை செயலர் இறையன்பு ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார்.
7 பேர் விடுதலை மற்றும் நீண்ட நாள் சிறைவாசம் வசிக்கும் இஸ்லாமிய கைதிகள் விவகாரம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள், தற்போது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ அவரது பேட்டி...
‛‛திமுக பேச வேண்டும் என்பது என் விருப்பம். பேசுவார்கள் என்று நம்புகிறேன். இந்த மயக்கத்தில் இருந்து அவர்கள் விடுபட்டு அவர் தெளிவாக பேசுவது நல்லது. கொள்கை முடிவை அமைச்சர்களோ, முதலமைச்சரோ கூறுவது தான் சரியாக இருக்கும். அல்லது சட்டமன்ற அவை முன்னர் கூறுவது சரியாக இருக்கும். மீண்டும் மீண்டும் முதன்மை செயலர் தான் கொள்கை முடிவுகளை அறிவிக்கிறார். முதன்மை செயலர் பெயரில் இந்த ஆட்சி இல்லை. இதை அரசியலாக்காதீங்க... வழக்கமான நடைமுறை தான் என முதன்மை செயலர் கூறுகிறார். இதை சொல்ல அவர் யார்...? அவர் ஒரு பணியாளர், கொள்கை முடிவை அவர் எப்படி கூறலாம்...? அப்புறம் முதல்வர் எதற்கு? அமைச்சர்கள் எதற்கு? முதன்மை செயலரே ஆட்சியை நடத்தலாமே... அப்புறம் எதற்கு முதல்வர். அவர் யார் இதை சொல்வதற்கு.
திமுக பழசை நினைத்து பார்க்க தவறிவிட்டது. இந்த 7 பேர் விடுதலையாகாட்டும், இஸ்லாமிய சிறைவாசிகள் ஆகட்டும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என எதிர்கட்சியாக இருந்த போது திமுக போராடியதா இல்லையா? அப்படி போராடியது உண்மையில் அது நடிப்பல்ல... துடிப்பு தான் என்று சொன்னால், இன்றைக்கு திமுக செய்வது நடிப்பு. இன்றைக்கு செய்வது தான் சரியென்றால், நீங்கள் எதிர்கட்சியாக இருந்த போது செய்தது நடிப்பு தான்.
அபுதாஹிர் என்பவர் சிறைவாசி 13 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவர் பார்வை இழந்துவிட்டார். அவர் வெளியே வந்து என்ன செய்ய போகிறார். இதையெல்லாம் தீர்க்க வேண்டுமானால், முதலமைச்சர் வெளிப்படையாக பேச வேண்டும். அப்போது தான், இந்த பிரச்சனைக்கு தீர்வு,’’ எனக்கூறியுள்ளார்.
திருச்சி வேலுச்சாமியின் பேட்டி வீடியோ இதோ...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்