அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகார பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கையை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுவர் விளம்பரங்கள், கட்சி அலுவலகங்களில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரோ, புகைப்படமோ இருக்கக்கூடாது என, அ.தி.மு.க. நிர்வாகிகள் அதனை அழித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் போஸ்டர்கள் ஓட்டி வருகின்றனர்.




இந்த நிலையில் கோவை மாநகர பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவை ரயில் நிலையம், உக்கடம், டவுன் ஹால், பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர். அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன் சார்பில், அவரது புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அண்ணா ஆகியோரின் புகைப்படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. அதேசமயம் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம் பெறவில்லை.


இபிஎஸ் என்பதற்கு எவர்கிரீன் பவர்ஃபுல் ஸ்டார் என விளக்கம் அளிக்கும் வகையிலான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் ’கழகம் காக்க வந்த காவலரே, தலைமை ஏற்க வா’ என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. கோவை மாநகர அதிமுக செயலாளர் சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதால், கோவை அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வர வேண்டுமென விரும்புவதையும் தெளிவாகியுள்ளது.


இதனிடையே அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சில கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தது. தன்னுடைய கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடியாது என்பன போன்ற விஷயங்களை ஓபிஎஸ் தரப்பு தெரிவித்திருந்தது.  இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த மனுவிற்கு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவ்வப்போது ஓபிஎஸ் நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாகவும், ஒற்றை தலைமை வேண்டும் என்கின்றனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை என்பன போன்ற விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண