சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திமுக-வும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க அதிமுக-வும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

Continues below advertisement

பயப்படமாட்டேன்:

சேலத்தில் இன்று நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 

"எங்கள் மடியிலே கனம் இல்லை. வழியிலே பயம் இல்லை இன்னும் பல பேர் சொல்றான். கொடநாட்டில் எடப்பாடி பழனிசாமி எப்படினு உங்களுக்குத் தெரியும். என்ன பூச்சாண்டு காட்டினாலும் எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டான்.

Continues below advertisement

சட்டத்தின் ஆட்சி நடத்தினோம். அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டப்படி தவறு செய்பவர்களை கண்டுபிடித்து சிறையில் அடைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இந்த ஆட்சியில் அப்படியா இருக்கிறது?

விசுவாசமானவர்களா?

வேண்டுமென்று திட்டமிட்டு துரோகிகளும் இன்று பேசி வருகின்றனர். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எண்ணிப்பாருங்கள். இவர்கள் இயக்கத்திற்கு விசுவாசமானவர்களா?"

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர் நெருக்கடி:

பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு அதிமுக-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, சட்டமன்ற தேர்தலை நோக்கி அதிமுக செயல்பட்டு வருகிறது. அதேசமயம், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை சிலர் முன்னெடுத்து வருகின்றனர். 

முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் இந்த கோரிக்கையை வலுவாக எடுத்து வைத்த நிலையில் தினகரன் - ஓ.பன்னீர்செல்வத்துடன் அவர் ஒன்றாக தேவர் குருபூஜையில் பங்கேற்ற பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றும், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியே  ஏ1 என்றும் விமர்சனத்தை முன்வைத்தார். இது அதிமுக-வினர் மத்தியில் அதிர்வலையை உண்டாக்கியது. 

கூட்டணி:

செங்கோட்டையன் விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி அன்றே விளக்கம் அளித்த நிலையில், கட்சியில் அவரது ஆதரவாளர்களை களையெடுக்கும் பணியையும் அவர் செய்து வருகிறார். இந்த சூழலில் தான் எதற்கும் அஞ்சமாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தனது உரையில் பேசியுள்ளார். தவெக, பாமக, தேமுதிக என பல கட்சியினருடனும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதிகாரப்பூர்வமாக யாரும் கைகோர்க்கவில்லை.

கட்சி முழுவதும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு நடந்த பெரிய தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. மேலும், கட்சியின் உள்ளேயும் மோதல் வலுத்து வரும் சூழலில் வரும் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி களமிறங்கியுள்ளார்.