சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தான் பதவிக்காக எங்கும் போய் நிற்பவன் அல்ல என்றும், பதவி என்பது தனக்கு ஒரு கர்ச்சீஃப் போன்றது என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிலை அவர் யாருக்காக அளித்தார்.? பார்க்கலாம்.

Continues below advertisement

அதிமுகவை விட்டு விலகுவதாக சொல்லவே இல்லை - ஜெயக்குமார்

அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, சென்னை கோடம்பாக்கத்தில், அதிமுக சார்பில், அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்று விமர்சித்து, பாஜக உடன் கூட்டணி அமைந்தால், அதிமுகவிலிருந்து விலகுவதாக ஜெயக்குமார் கூறினார் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், நான் எப்போது அப்படி சொன்னேன் என்று கேள்வி எழுப்பி, தான் அப்படி செல்லவே இல்லை என்று திட்டவட்டமாக அந்த தகவலை மறுத்தார். மேலும், தான் சொல்லாத, நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு விஷயத்தை, சமூக ஊடகங்கள் பரப்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Continues below advertisement

தன்னுடைய குடும்ப பாரம்பரியமே திராவிடம்தான் என்றும், தனது பெரியப்பா தொடங்கி அனைவருமே திராவிடத்தின் வழியில் வந்தவர்கள் தான் என்று கூறிய ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அதிமுகவில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

மேலும், தனக்கும் அடையாளம் கொடுத்தது அதிமுக தான் என்றும், அப்படிப்பட்ட இயக்கத்திலேயேதான் தனது பயணம் தொடரும் என்றும் கூறினார். அதோடு, பதவிக்காக யார் வீட்டிலும் தான் போய் நின்றத்தில்லை என்றும், இனியும் நிற்க மாட்டேன் என்றும் தெரிவித்தார் ஜெயக்குமார்.

தொடர்ந்து பேசிய அவர், பதவி என்பது என் தோளில் உள்ள துண்டு என்று அண்ணா கூறினார், ஆனால், தன்னை பொறுத்தவரை அது ஒரு கர்ச்சீஃப் போன்றது என்றும், உயிர்மூச்சு உள்ளவரை அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில்தான் இருப்பேன் என்றும் ஜெயக்குமார் ஆவேசமாக கூறினார்.