Seeman : ‘சங்கி-ன்னா நண்பேண்டா’ – பாஜக, அதிமுக கூட்டணியில் சீமான்..? அதிர்ச்சியில் விஜய்..!
’ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்று விஜய் கூறியும் யாரும் அந்த கட்சியோடு கூட்டணி வைக்க முன் வராததால் பெரும் விரக்தியில் இருக்கிறார் ஆதவ் அர்ஜூனா..!

அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். இதுதான் நடக்கும். இது நடக்காது என்று அறுதியிட்டு சொல்ல முடியாத இடம்தான் இந்த அரசியல். ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக கொள்கையை அவ்வப்போது கொள்ளைப்புறத்தில் வைத்துவிட்டு, முன்வாசலில் எதிரிக்குக் கூட கோலம்ப்போட்டு வணக்கம் வைத்து வரவேற்பதுதான் இன்றைய அரசியல். என்றைக்கும் அதுதான்.
அப்படியிருக்கையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாஜகவுடன் கூட்டணியை மீண்டும் அமைத்துள்ளதாக மார்த்தட்டிக்கொள்கிறது அதிமுக. இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று முழங்கிய எடப்பாடி பழனிசாமியே அமித் ஷா அருகே கப்சிப் என உட்கார்ந்திருந்த காட்சிகளை சமீபத்தில் தமிழ்நாடே பார்த்தது. இந்நிலையில், திமுக ஆட்சியை அகற்ற அதிமுக மட்டும்போதாது என்று நினைக்கும் பாஜக. நாம் தமிழர் கட்சியையும் கூட்டணிக்குள் கொண்டுவர வியூகங்களை அமைத்து வருகிறது.
Just In




என்னச் செய்யப் போகிறார் சீமான் ?
அரசியல் களம் கண்ட நாள் முதல் தேர்தலில் தனித்தே போட்டியிடுவதை வழக்கமாகவும் கொள்கையாகவும் கொண்டுள்ள சீமான், 2026ஆம் தேர்தலில் தனித்தே போட்டி என்று அறிவித்திருந்தாலும் சமீபத்திய பாஜகவுடனான அவருடைய நெருக்கம், நிலைப்பாட்டை மாற்றி கூட்டணிக்குள் செல்ல ஆயத்தம் ஆகிவருகிறாரோ என்ற எண்ணம் அரசியல் நோக்கர்களுக்கு எழுந்திருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் என்பது அதிமுகவிற்கு வாழ்வா சாவா? தேர்தல். அதிமுக என்பதை காட்டிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல் இது. அப்படியிருக்கையில், எப்படியாவது மீண்டும் தன் தலைமையில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தலைக்குப்புற நின்று தண்ணிக் குடிக்கக் கூட எடப்பாடி பழனிசாமி தயங்கமாட்டார். அதனால், சீமானை தங்களுடைய கூட்டணிக்குள் கொண்டுவர பாஜகவோடு சேர்ந்து அவரும் தயாராகி வருகிறார்.
சீமான் வந்தால் ஏற்றுக்கொள்வோம் – நயினார்
புதிதாக பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், தனி மரம் தோப்பாகாது என்றும் சீமான் உள்ளிட்டோரை கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியில் தமிழக பாஜக ஈடுபடும் என்று தெரிவித்திருப்பதும் அண்ணாமலை உள்ளிட்டோருடன் சீமான் அடிக்கடி ஒரே இடத்தில் தோன்றுவதும் புதிய கூட்டணிக் கணக்குகள் தமிழகத்தில் உருவாகின்றன என்பதற்கான சான்றுகள்.
சைதை துரைசாமியின் முயற்சி
இந்நிலையில், அதிமுகவின் முக்கிய பொறுப்புகளிலும் சென்னை மேயர் உள்ளிட்ட பதவிகளிலும் இருந்த சைதை துரைசாமியை சமீபத்தில் சீமான் சந்தித்தாகவும் அவர் சீமானை அதிமுக, பாஜக கூட்டணியில் இணைய வைப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
கூட்டணிக்கே போகலாம் – மாற்றத்தை நோக்கி நா.த.க
பணமும் அதிகாரமும் கையில் இல்லாமல் இன்னும் எத்தனை நாட்களுக்குதான் தனித்தே போட்டியிடுவது என்ற எண்ணம் நாம் தமிழர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் வந்துவிட்டதாகவும், இந்த முறையும் தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்தால் அடுத்த 5 வருடத்திற்கு கட்சியை நடத்துவதிலும், நிர்வாகிகள் கட்சியில் தொடருவதிலும் இருக்கும் சிக்கலை சீமான் உணர்ந்துள்ளதாகவும் அதனால் இந்த முறை திமுகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சியோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்ற எண்ணத்தை அவருக்கு சில வியூக வகுப்பாளர்கள் சீமானிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் உடன்படும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் தகவல்கள் கச்சைக் கட்டி பறந்து வருகின்றன.
எனவே, இப்போத் பிரபலமாக இருக்கும் ‘ஆட்சியில் பங்கு’ என்ற நிபந்தனையை முன் வைத்து விரைவில் நாம் தமிழர் கட்சியும் கூட்டணியில் இணையலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அப்படி சீமான் தன்னுடைய இந்த கொள்கையில் சமரசம் செய்துக்கொண்டு கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்வதே அவருக்கும் அவரது கட்சிக்கும் தமிழ்நாட்டில் எதிர்காலத்தை கொடுக்கும் என்பதும் அவர்களது கணிப்பு