தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. புதியதாக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதி “கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகநாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி அளிக்கப்படும்.
இதுதவிர, அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு என முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். கடந்தாண்டு கொரோனா முதல் அலையின் தாக்கத்தின்போது, அ.தி.மு.க. சார்பில் ரூபாய் 1 கோடி தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. இப்போது, அரசிடம் வழங்கப்படும் ரூபாய் 1 கோடி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியம் மக்களின் துப்னம் துடைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என கூறப்பட்டுள்ளது.
சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் 65 எம்.எல்.ஏ.க்களும், நாடாளுமன்றத்தில் ஒரு மக்களவை உறுப்பினரும் உள்ளனர். இதுதவிர, நாடாளுமன்ற மாநிலங்களவையில் 6 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் வைத்திலிங்கமும், கே.பி.முனுசாமியும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால் தங்களது பதவியை மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.