அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செலவம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில், தேர்தலை நடத்தலாம் என்றும் ஆனால் முடிவை அறிவிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசமி இருதரப்பினர் நீதிமன்றத்தில் வைத்த வாதங்களை காண்போம்.


ஓபிஎஸ் தரப்பு வாதம்:




ஜெயலலிதாவே நிரந்தர பொதுச் செயலாளர் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த பதவியை வேறு யாரும் வகிக்க முடியாது. இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. 


வெள்ளிக்கிழமை அட்டவணை வெளியிட்டு, ஞாயிறன்று  வேட்புமனுத்தாக்கல் நிறைவு என அவசரம் காட்டியுள்ளனர். பொதுச் செயலாளர் பதவிக்கு சாதாரண உறுப்பினர்கள் போட்டியிட முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர்.


மேலும்,  இன்றுடன் வேட்புமனுதாக்கல் நிறைவு என, இன்று மாலையே பொதுச்செயலாளர் அறிவிக்கப்படலாம். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியே வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்  என ஒபிஎஸ் தரப்பினர் வாதம் வைத்தனர்.


இபிஎஸ் தரப்பு வாதம்:




கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரும் வழக்கு தொடர உரிமையில்லை எனவும், ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக வழக்கை தொடரவில்லை. 1.5 கோடி தொண்டர்களில் 1 சதவீதம் கூட ஓபிஎஸ்-க்கு ஆதரவு இல்லை.


பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. அ.தி.மு.க.வின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செயல்படுவதாகவும், அதிமுகவின் எதிர்காலத்தை கருதியே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.


அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறும் ஓபிஎஸ், தேர்தலை தடுக்க நினைப்பது ஏன்? கட்சிக்கு விதிராக நீதிமன்றங்கள் சென்றால் பதவி பறிக்கப்படும் என விதிகள் உள்ளன என உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது.


ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஏன் கொண்டு வரக்கூடாது என்ற காரணத்தை ஓ.பன்னீர்செல்வம்  தரப்பினர் தெரிவிக்கவில்லை. சூழ்நிலைகள் கருதி சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இபிஎஸ் தரப்பினர் வாதங்களை வைத்தனர்.


நீதிமன்றம் தரப்பு:




இவ்வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். அப்போது, பொதுக்குழு தீர்மான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவேண்டிய அவசியம் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தலாம் என்றும், ஆனால் முடிவை அறிவிக்க வேண்டாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். 


மேலும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கை ஏப்ரல் 11-க்கு பதிலாக முன்கூட்டியே மார்ச் 22-ம் தேதியை விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்பை அதையடுத்து மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.


இந்நிலையில், இத்தீர்ப்பை இரு தரப்பினரும் தங்களுக்கு சாதகமாக வந்துள்ளதாக கூறி கொண்டாடி வருகின்றனர்.