அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புதிதாக டெண்டர் முறைகேடு வழக்கு ஒன்றை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள நிலையில், இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Continues below advertisement

திமுக அமைச்சர்கள் மீது பாய்ந்த இபிஎஸ்

அதில் “திமுக அரசின் அமைச்சர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஊழல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், 2021ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அடித்த அந்தர் பல்டியைப் பார்த்த சென்னை உயர்நீதிமன்றமே, தன்னிச்சையாக இந்த வழக்குகளை மீண்டும் விசாரித்து வருவதில் இருந்தே, முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஏவல்துறை எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

திமுக அரசின் குறைகளை பட்டியலிட்ட எடப்பாடி

மேலும், கட்டுமானப் பொருட்கள் கடுமையான விலை உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய பெருமை திமுக அரசுக்கு கிடைத்திருக்கிறது என்றும், அதனால் கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தமிழக மக்களின் கவனத்தை திசைத் திருப்ப, தனது கண் அசைவுக்கு ஏற்ப தாளம் போடும் லஞ்ச ஒழிப்புத்துறையை சகோதரர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏவிவிட்டிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வேலுமணி சாதனைகளை பட்டியலிட்ட எடப்பாடி

கூடுதலாக அந்த அறிக்கையில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது அவர் செய்த சாதனைகளையெல்லாம் பட்டியலிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, 2017 முதல் 2021 வரையிலான நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறையில் மட்டும் வேலுமணி 123 விருதுகளும், நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் உள்ளிட்ட துறைகளில் மேலும் பல விருதுகளும் பெற்று சாதனை படைத்தவர் என்று அவருக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.

19 அமாவாசைகள்தான் திமுக ஆட்சி இருக்கும்

மேலும், திமுக ஆட்சியின் ஆயுட் காலம் இன்னும் 19 அமாவாசைகள்தான் என்றும், திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சர்வதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்றும் அந்த அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.