சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த திட்டம் போட்டு காய் நகர்த்தி வரும் அதிமுக, முதல் ஆளாக விருப்ப மனு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு விருப்பமனுவை விநியோகித்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான விருப்ப மனு இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது.
விருப்ப மனுவை வாங்க குவிந்த அதிமுகவினர்
இன்று முதல் வருகிற டிசம்பர் 23 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ள நிலையில், தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் , புதுச்சேரிக்கு 5ஆயிரம் ரூபாய், கேரள மாநிலத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு பெற விரும்புவோர், அதற்கான கட்டணத்தை வரையோலைகாக செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதல் நாளான இன்றே தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அதிமுக அலுவலகத்தில் திரண்டு வந்து விருப்ப மனுக்களை பெற முண்டியடித்து வாங்கி வருகிறார்கள். முதல் நாளே ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு வாங்க குவிந்ததால் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.
எடப்பாடி பெயரில் விருப்ப மனு
பலரும் தங்களது தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு அளித்து வருகின்றனர். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அதிமுக துணை பொதுச்செயலாளர்கள் KP முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் SP வேலுமணி, அமைப்பு செயலாளர் தங்கமணியிடம் சமர்பித்து வருகின்றனர். முதல் நாளான இன்றே ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனுக்களை பெற வந்ததால், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.