எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக குறித்து பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக்கூறி இன்று பேசினார். அவர் பேசியதாவது “ ஸ்டாலினுடன் மிசா சிறையில் சித்திரவதை அனுபவித்த மூத்த நிர்வாகிகள் யாரும் அவர் கண்ணுக்கு தெரியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறது. திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்திருந்தால் அக்கட்சியில் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். ஆனால் திமுகவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது.


மன்னராட்சி:


உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக இருந்த போதே அமைச்சருக்கான மரியாதை வழங்கினர். இப்போது துணை முதலமைச்சராக்கி உள்ளனர். திமுகவை வளர்த்த மூத்த அமைச்சர்கள் இருக்கும் போது அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு உதயநிதியை துணை முதலமைச்சராக்கி உள்ளனர். திமுகவில் ஸ்டாலின் அரசன்; உதயநிதி இளவரசனாக இருக்கிறார். திமுகவில் சர்வாதிகாரம் நிலவுகிறது.


இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. எனவே தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை முளைக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். 




சேலம்:


திமுக அமைச்சர்களுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் இதுவரை கண்ணுக்கு தெரியாமல் தற்போது தேர்தல் வருவதால் திமுக அமைச்சர் ஒருவர் சேலம் மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் எனும் பெயரில் மனுக்களை வாங்கி வருகிறார். இதனால் என்ன பயன். எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றுமே செய்யவில்லை என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறுகிறார். எடப்பாடி தொகுதியில் மட்டும் 3000 மனுக்கள் வந்துள்ளதாக கூறிய அமைச்சர், என்னென்ன மனுக்களை மக்கள் வழங்கினர் என்று கூறவில்லையே. 



திமுக ஆட்சியில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதுதான் திமுகவின் சாதனை. அதிமுகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இரண்டரை ஆண்டுகள் கழித்து மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டுவருமாறுதான் எடப்பாடி தொகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். எடப்பாடி தொகுதியில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் முழுமையாக அமைச்சர் ராஜேந்திரனுக்கு தெரிந்திருந்தால் என்மீது இப்படிப்பட்ட கருத்தை அவர் தெரிவித்திருக்க மாட்டார்.



கட்சிக்காக உழைத்த ஸ்டாலின்:



தொடர்ந்து பேசுகையில் கலைஞர் தலைவராக இருந்த போது ஸ்டாலின் 20 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் குறித்து தெரிவிக்கையில் கலைஞர் குடும்பம் என்கிற அடையாளத்தை மட்டுமே வைத்து துணை முதலமைச்சராகி உள்ளார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 



குறைத்து மதிப்பிட வேண்டாம்”


அதிமுகவின் வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதிமுக பிரிந்து இருப்பதால் ஓட்டு குறையும் என்றார்கள். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 1 சதவீதம் கூடுதல் வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.  திமுகதான் 2019 தேர்தலை காட்டிலும் 2024 தேர்தலில் குறைந்த வாக்குகளை பெற்று மக்கள் மத்தியில் சரிவை சந்தித்துள்ளனர். எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் ஸ்டாலினால் அதிமுகவை வீழ்த்த முடியாது.



திமுக சொந்த கட்சியை நம்பாமல் கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது. அதிமுக, சொந்த கட்சியையும் உழைக்கும் நிர்வாகிகளையும் நம்பியே உள்ளது. கூட்டணி இல்லை என்றால் திமுக இல்லை என்கிற நிலைதான் உள்ளது.  அதிமுக தலைமையிலான கூட்டணி, வெற்றி கூட்டணி. 2026 தேர்தல் திமுக வீட்டுக்கு அனுப்பி, அதிமுக ஆட்சி அமைக்கின்ற தேர்தல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.