கேரள மாநில் திருச்சூர் தொகுதியின் பாஜக எம்.பியும் , மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் முதல்முறையாக ஒரு மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. அந்த ஒரு தொகுதியான திருச்சூரில் வெற்றி பெற்றது நடிகரான சுரேஷ் கோபிதான். இவரது வெற்றியானது , பாஜகவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியும் பாஜக தலைமை வழங்கியதாக பார்க்கப்படுகிறது.
சிக்கலில் சுரேஷ் கோபி:
அவரது பேச்சு அவ்வப்போது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு சிக்கலானது சென்றுள்ளது.
இந்நிலையில் என்ன பிரச்னை , யார் புகார் கொடுத்தது என பார்ப்போம்.
கடந்த ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழாவானது நடைபெற்றிருக்கிறது. இவ்விழாவானது மிகவும் பிரசித்தி பெற்றதால் , மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
அப்போது, இவ்விழாவுக்கு பங்கேற்கச் சென்ற சுரேஷ் கோபி, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆம்புலன்சில் சென்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பலரும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அப்போது தெரிவித்ததாவது, ஆம்புலன்சில் செல்லவில்லை எனவும் , இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கூட தயார் எனவும் தெரிவித்தார்.
ஆனால் தற்போது தமக்கு காலில் ஏற்பட்டிருந்தது , அதற்காக ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தினேன் எனவும் தெரிவித்துள்ளார்.
வழக்குப் பதிவு:
இந்த விவகாரம் தொடர்பாக, கேரள காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சுரேஷ் கோபி மீது 6 மாதம் சிறை வழங்கக்கூடிய பிரிவில் கேரள காவல்துறையானது வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரமானது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம்கூட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.