Mamata Banerjee: காங்கிரஸ் கட்சிக்கு இந்தி பேசும் மாநிலங்களில் 40 இடங்கள் கூட கிடைக்காது என  மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.


காங்கிரசை விளாசிய மம்தா பானர்ஜி:


மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சுமூகமான முடிவு எட்டப்படும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிலையில் மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்கக் கோரி கொல்கத்தாவில் நடைபெற்ற தர்ணாவில் மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உரையாற்றினார்.


அப்போது, “ இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுடன் காங்கிரஸ் நேரடியாக மோத வேண்டும் என சவால் விடுத்துள்ளார். அதோடு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் குறைந்தது 40 தொகுதிகளையாவது வெல்லுமா? என்பதே சந்தேகம்" எனவும் தெரிவித்துள்ளார்.


ராகுல் நடைபயணத்தை விமர்சித்த மம்தா:


மேற்கு வங்க மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் பயணித்த 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா’ எனும் ராகுல் காந்தியின் நடைபயணத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதன்படி, ராகுலின் நடைபயணம் மாநிலத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கில் புலம்பெயர்ந்த பறவைகளுக்கான வெறும் புகைப்பட வாய்ப்பு தான்.


”தனித்து போட்டியிடட்டும்”


காங்கிரஸ் 300 இடங்களில் (பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் பகுதிகளில்) போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன், ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இப்போது, ​​முஸ்லிம் வாக்காளர்களை தூண்டுவதற்காக அவர்கள் மேற்குவங்கத்திற்கு வந்துள்ளனர். "நாங்கள் கூட்டணிக்கு தயாராக இருந்தோம், அதை அவர்கள் நிராகரித்தார்கள். இப்போது அவர்கள் 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடட்டும். இதன்பிறகு, எங்களுக்குள் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. வங்காளத்தில் தனித்து போராடி பாஜகவை தோற்கடிப்போம்" என மம்தா சூளுரைத்துள்ளார்.


நொறுங்கும் I.N.D.I.A. கூட்டணி, பிரச்னை என்ன?


ஏற்கனவே நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளின் கூட்டண்இயிலிருந்து விலகி, பாஜகவிடம் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் I.N.D.I.A. கூட்டணியின் முக்கிய தலைவராக கருதப்படும் மம்தா பானர்ஜியும் காங்கிரசுக்கு இடம் ஒதுக்க முடியாது, மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுகிறோம் என அறிவித்துள்ளார். இதனால், பாஜகவை வீழ்த்துவோம் என்ற சூளுரையுடன் ஒன்று சேர்ந்த  I.N.D.I.A. கூட்டணி தற்போது மெல்ல மெல்ல உடைய தொடங்கியுள்ளது.


இதனிடையே, மம்தாவின் கோபத்திற்கு ராகுலின் நடைபயணம் தான் காரணம் என கூறப்படுகிறது. அதாவது, மேற்குவங்கத்தில் அவர் நடைபயணமாக சென்ற பகுதிகள் என்பது,  சிறுபான்மை மக்கள் மற்றும் பாரம்பரிய காங்கிரஸ் ஆதரவிற்காக அறியப்பட்ட உத்தர் தினாஜ்பூர், மால்டா மற்றும் முர்ஷிதாபாத் ஆகியவை ஆகும், இதன் மூலம் தங்களுக்கான வாக்குகளை காங்கிரஸ் பிரிப்பதாக மம்தா கருதுகிறார் என கூறப்படுகிறது. இதன் விளைவாக தான் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட வழங்க முடியாது என, அவர் அறிவித்துள்ளார். அவரது முடிவு கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.