அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவக் கல்வி இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு நடப்பாண்டிலேயே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு.
இடஒதுக்கீடுதான் சமூகநீதி என மண்டல் கமிஷன் பரிந்துரைத்தும் கமிஷன் எல்லாம் கண் துடைப்புக்குதான் என பரிந்துரைத்ததில் பாதி இன்றளவும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. இதற்கிடையேதான் தற்போது மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. யானைப் பசிக்குச் சோளப்பொறிதான் என்றாலும் சோளப்பொறியேனும் கிடைத்ததே என அதனை வரவேற்றுள்ளார்கள் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள்.
ஆளும் திராவிட முன்னேற்றக்கழக அரசின் சமூக நீதிப் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி என அறிக்கை விடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைவிடாத சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த மற்றொரு சாதனை மைல்கல் எனக் கூட்டறிக்கை விடுத்துள்ளனர் எதிர்க்கட்சியின் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.
’பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து பிரதமராக வந்துள்ள நரேந்திர மோடி, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உணர்வுகளை மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரச்சினைகளையும், துன்பங்களையும் புரிந்து கொண்டு வந்து இட ஒதுககீட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்’ என மார்த்தட்டிக் கொண்டுள்ளது பா.ஜ.க.,
இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு ‘நான் தான் காரணம்’ என ஓ.பி.சி. இடஒதுக்கீட்டுக்கு ஓனர்ஷிப் கொண்டாடுகின்றன கட்சிகள். உண்மையில் யார்தான் காரணம்?
இடஒதுக்கீடு கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கலாமே ஒழிய பாரதிய ஜனதாவை பாராட்ட முடியாது எனக் கருத்து கூறியுள்ளார் ஆல் இந்தியா ஓ.பி.சி. ஃபெடரேஷன் அமைப்பின் தலைவர் கருணாநிதி.
’திமுக அரசு தொடுத்த வழக்கு விசாரணையில் இடஒதுக்கீடு குறித்து முடிவு சொல்லவில்லையென்றால் நீட் தேர்வையே இந்த ஆண்டு தடை செய்யவேண்டி இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது மத்திய அரசு வழக்கறிஞர் வாய்மூடி மௌனமாகதானே இருந்தார்! இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கூட இந்த ஆண்டுக்கான அரசின் நீட் நோட்டிஃபிகேஷனில் இந்த இடஒதுக்கீடு எதுவும் இடம்பெறவில்லையே. பிறகு ஏன் இந்த விளம்பரம்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அதிகாரபூர்வமாக இங்கே தொடங்கியது 1969ல் கருணாநிதி ஆட்சியில். பிற்படுத்தப்பட்டோருக்கான கமிஷனை உருவாக்கினார், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 25லிருந்து 31 சதவிகிதமாக அதிகரித்தார். அதில் பொருளாதார அளவுகோல்கள் எதுவுமில்லை.
ஆனால் 1979ல் எம்.ஜி.ஆர் இடஒதுக்கீட்டுக்கான தகுதி வரம்பை வருடாந்திரச் சம்பளம் 9000 ரூபாய் என நிர்ணயித்தார். அந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது அதிமுக. சுதாரித்துக்கொண்ட எம்.ஜி.ஆர்., பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 30 சதவிகிதத்திலிருந்து 50 என அதிகரித்தார்.
சட்டநாதன் ஆணையம் போய் அம்பாசங்கர் ஆணையம் வந்தது. அரசுத்துறையில் 27 சதவிகித இடஒதுக்கீடு இதற்கடுத்த காலக்கட்டத்தில்தான் மத்திய அரசு அமல்படுத்தியது. இருந்தும் கல்வியில் இந்த இடஒதுக்கீடு என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.
தொடர்ச்சியாக ஜெயலலிதா ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் அகில இந்திய ஒதுக்கீட்டில் கல்வியில் 50 சதவிகிதம் வேண்டுமெனக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதே சமயம் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என உச்சநீதிமன்றத்தை நாடியது திமுக. திமுகவை உயர்நீதிமன்றத்தை அணுகச் சொன்னது உச்சநீதிமன்றம். இடஒதுக்கீடு இல்லையென்றால் நீட்டுக்கே தடைவிதிப்போம் என உயர்நீதிமன்றம் எச்சரித்தது. இந்த நிலையில்தான் 27 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியிருக்கிறது மத்திய ஆட்சி.
கடிதத்துக்கு மேல் கடிதம் கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வலியுறுத்தலுக்கு மேல் வலியுறுத்தல் என மாறி மாறிக் கொடுத்த அழுத்தத்துக்கு பலன் இல்லையென்றாலும் நீதிமன்ற விடுத்த எச்சரிக்கைக்கு கிடைத்த பலன் இது. தமிழ்நாட்டின் விடாமுயற்சி நீதி வெல்லும் சமூகநீதி வாழும் என நிரூபித்துள்ளது.