பிரபல நடிகர் மற்றும் முன்னாள் ஆந்திரா முதலமைச்சரான என்.டி,ராமாராவ் அவர்களின் நூறாவது ஆண்டு பிறந்தநாள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் விஜயவாடாவில் நிகழ்வு ஒருங்கிணைக்கப் பட்டது. இந்த நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,தெலுங்கு தேசம் கட்சித் தலைவராகிய சந்திரபாபு நாயுடு,பாலகிருஷ்ணன் ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் என்.டி.ராமாராவ்,சந்திரபாபு நாயுடு,பாலகிருஷ்ணன் ஆகியவர்களைப் பற்றி புகழ்ந்து பேசினார்.


தனது இளமைப் பருவத்தில் என்.டி.ஆர் தனக்கு எவ்வளவு பெரிய உந்துதலாக இருந்தார் என்றும், அவரின் படங்களை பார்த்தே தான் சினிமாவில் நடிக்க சென்னை கிளம்பி வந்ததாகவும் தனது இளமைப் பருவ நினைவுகளை ரஜினி பகிர்ந்தார். அடுத்ததாக பாலய்யாவின் நடிப்பை மிகவும் பாராட்டி பேசினார்.அமிதாப் பச்சன்,ஷாருக் கான் ஆகிய யாரும் செய்யாத ஒன்றை பாலைய்யா சாதித்ததாக அவரை மிகவும் புகழ்ந்து பேசினார் ரஜினிகாந்த்.  இதனிடையே முன்னாள் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபுவைக் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதை  கடுமையாக  விமர்சித்துள்ளார் நடிகை ரோஜா.இந்த நிகழ்வு சமூக வலைதளத்தில் பரபரப்பாகி வருகிறது.


அனைவரையும் பற்றியும் மிகவும் பாராட்டி பேசிய நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுவை பற்றி பேசும்போது ஹைதராபாத்தின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடுதான் காரணம் என கருத்து தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்திற்கு ஆந்திராவில் ஆட்சி அமைத்துள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். குறிப்பாக நகரித் தொகுதி எம்.எல்.ஏ வான நடிகை ரோஜா ரஜினியின் கருத்தை மறுக்கும் விதத்தில் பேசியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”2004 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழந்த பின்பு ஆந்திரா மாநிலம் இரண்டாக பிளந்து ஹைதராபாத் தனி மாநிலமாக மாறியது.2014 முதல் 2019 வரை தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தது.தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஹைதராபாத்தின் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முன்னாள் முதலமைச்சராக இருந்த ராஜசேகர் ரெட்டி பல்வேறு பல ஏழை வீட்டு குழந்தைகள் படிப்பதற்காக பல நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார். அந்திராவில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு சென்று படிக்க முடிந்ததற்கு அவரே காரணம்.


ஆனால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஹைதராபாத்தின் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் ரஜினி இப்படி பேசியது மிகவும் தவறானது. மேலும் அவர் பேசியது சந்திரபாபு நாயுடுவையே அவமதிப்பது போன்றது. இது எங்கள் அனைவரின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளது. சந்திரபாபு நாயுடு என்.டி.ஆரை  சட்டமன்றத்தில் அவமதித்துள்ளார். இதற்கான மொத்த சான்றுகளையும்  நானே நடிகர் ரஜிகாந்திற்கு நேரடியாக அனுப்புவேன்” என்றும் கூறியுள்ளார். ஒரு நடிகராக ரஜினிகாந்த் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், ஆனால் ரஜினி அரசியல் குறித்து ஒன்றும் தெரியாது என ரோஜா கூறியுள்ளார்.