அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் விமர்சனம் வைத்துள்ளார்.


தொடரும் வார்த்தை போர்:


அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதிமுகவிற்கும் மாநில பாஜகவிற்கும் வார்த்தை போர் வெடித்துள்ளது. குறிப்பாக, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


அதற்கு சாட்சியாக, அண்ணாமலை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டதற்கு, "முதிர்ச்சியற்ற தலைவர்களின் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என பதில் அளித்தார். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் நீண்டு கொண்டு செல்கிறதா? என கேள்விகள் எல்லாம் எழுந்தது.


இதற்கிடையே, டெல்லியில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அண்ணாமலையும் பங்கேற்றார். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த டெல்லி சந்திப்பு:


இந்த சந்திப்பில் அண்ணாமலையுடனான எடப்பாடி பழனிசாமியின் மோதலுக்கு அமித்ஷா முற்றுப்புள்ளி வைத்ததாக தகவல் வெளியானது. பின்னர், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "அண்ணாமலையுடன் தகராறு இல்லை" என விளக்கம் அளித்தார்.


இச்சூழலில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக வாங்கும் இடத்தில் இல்லை. அதிமுகவும் கொடுக்கும் இடத்தில் இல்லை. மத்தியில் ஆளப்போவது மோடி. அதன் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் இருந்தாலே தமிழ்நாட்டுக்கு நல்லது. கூட்டணி என்று ஏற்படுமானால் 25 சீட்டுக்கு குறைவில்லாமல் தந்தாலே இல்லை எனில் தனியாகவே!" எனக் குறிப்பிட்டிருந்தார்.


அதிமுக, பாஜக கட்சிகளுக்கு இடையேயான மோதலுக்கு முற்றிப்புள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பாஜக மாநில பொருளாளர் கருத்து கூட்டணியில் மீண்டும் பூகம்பத்தை கிளப்பியது.


மீண்டும் கொளுத்தி போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:


இந்நிலையில், இன்று நிருபர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ்நாடு பாஜகவினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை. பா.ஜ.க.வினரின் விமர்சனங்களுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பது அ.தி.மு.க.வினருக்கு தெரியும். வேண்டாம் என்று அடக்கி வைத்துள்ளோம்.


அண்ணாமலை விளக்கம் தராவிட்டால் அவர் சொல்லித்தான் அ.தி.மு.க.வினரை பா.ஜ.க.வினர் விமர்சிப்பதாக நினைக்க வேண்டி வரும். அதிமுகவை பாஜக பொருளாளர் விமர்சித்தது அண்ணாமலைக்கு தெரிந்து நடந்ததா? இல்லையா? ஊடகங்கள் முன்னிலையில் அண்ணாமலை விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். பாஜக பொருளாளரை கண்டிப்பதாக அண்ணாமலை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்" என்றார்.