சேரி என்ற வார்த்தையை நான் தவறான அர்த்தத்தில் பேசவில்லை என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ தெரிவித்துள்ளார். 


கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சையான வகையில் பேசினார். இதற்கு நடிகை குஷ்பூ கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது தன்னை திமுக என அடையாளமிட்டு கொள்ளும் இணையவாசி ஒருவர், குஷ்பூவை மணிப்பூர் விவகாரத்தின் போது தூங்கிக் கொண்டிருந்தீர்களா? என  சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பேசிய குஷ்பூ,  "திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.


ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார். சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இப்படியான நிலையில் சென்னை விமான நிலையத்தில் குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது, “என் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தப்போகிறார்கள் என சொன்னார்கள். நானும் காத்திருந்தேன். யாரும் வரவேயில்லை. நான் என்னுடைய ட்வீட்டில் பிரெஞ்ச் மொழியிலான அர்த்தத்தில் தான் ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். மேலும் அந்த ட்வீட்டை நாம் திமுகவுக்கு தான் கொடுத்திருந்தேன். நடுவில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஏன் பொங்குகிறார்கள்? . திமுகவின் செய்தி தொடர்பாளர்களாக காங்கிரஸ் கட்சி உள்ளதா? அல்லது திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி வேலை பார்க்கிறதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். 


தொடர்ந்து பேசிய அவர், ‘திமுக கட்சிக்காரர்களே பேசல. கூட்டணி கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள். நான் சேரி என்ற வார்த்தையை தப்பான அர்த்தத்தில் பேசவில்லை என்கிறபோது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசு ஆவணங்களில் கூட சேரி என்ற வார்த்தை உள்ளது. வேளச்சேரி, செம்மஞ்சேரி என இடம் பெயர் இருக்குதே, அதற்கு என்ன அர்த்தம்? என்னை பொறுத்தவரைக்கும் எந்த பகுதி மக்கள் என்றாலும் அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற சம உரிமை உள்ளது. நான் தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற வார்த்தையை சொல்ல விரும்பவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்த இத்தனை வருடத்தில் நான் வேலை பார்த்த எல்லா இடத்திலும் தகாத வார்த்தையை நான் பேசமாட்டேன் என்பது தெரியும். என்னைக்கு நான் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினர் ஆனேனோ அன்று இருந்து தான் அதைப் பற்றி தமிழ்நாட்டில் பேசுகிறார்கள்” என தெரிவித்தார்.