தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமானவர் குஷ்பு.  பா.ஜ.க.வில் இணைந்தவருக்கு கடந்தாண்டு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.


பதவியை ராஜினாமா செய்த குஷ்பு:


இந்த நிலையில், நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். இது அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், 3 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், ஒன்றரை ஆண்டிலே அவர் இந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை குழந்தைகள் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. அவர் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.






சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக பெரியளவில் ஏதும் அரசியல் பரப்புரைகளில் குஷ்பு ஈடுபடவில்லை. சமீபகாலமாக அரசியல் நடவடிக்கைகளில் தன்னை பெரியளவில் ஈடுபடுத்திக் கொள்ளாத குஷ்பு தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.


பா.ஜ.க.வில் இருந்து விலகலா?


குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை குறிப்பிட்டு மற்ற கட்சியினர் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறாரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள குஷ்பு, தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்துதான் ராஜினாமா செய்துள்ளேன். பா.ஜ.க.வில் இருந்து அல்ல என்று பதிவிட்டுள்ளார்.


தி.மு.க.வில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய குஷ்பு, பின்னர் காங்கிரசுக்கு சென்றார். அங்கிருந்து காங்கிரஸ் கட்சியில் 2014ம் ஆண்டு இணைந்தார். பின்னர், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.