நடிகர்கர்கள் சினிமாவில் கிடைக்கும் புகழை வைத்துக் கொண்டு அதன் மூலம் முதலமைச்சர் ஆகலாம் என நினைக்கின்றனர். நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் தான் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளன் கூறியுள்ளார். 


மேலும் அவர், மக்களுக்கு தொண்டு செய்ய கருத்தியல் சார்ந்து பணியாற்ற அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் எனவும் கூறியுள்ளார். சினிமாவில் கிடைக்கும் புகழ் மூலம் மக்களை ‘ஹைஜாக்’ செய்து விடலாம் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. மம்முட்டி, அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வராமல் தங்களது வேலையைப் பார்க்கின்றனர். 


மேலும், சினிமாவில் கிடைத்த புகழ் இருந்தால் போதும் முதலமைச்சர் ஆகி விடலாம் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் தான் உள்ளது எனவும், மக்களுக்கு பணியாற்றி சிறைக்குச் சென்றவர்களை ஓரம் கட்டிவிட்டு, தங்களுக்கு உள்ள சினிமா புகழ் மூலம் மக்களை ஹைஜாக் செய்ய நினைக்கின்றனர் எனவும் அவர் பேசியுள்ளார். 


சினிமாவில் மார்க்கெட் போனவர்கள் சினிமாவில் தங்களுக்கு புகழைத் தேடிக்கொள்ளலாம் என நினைக்கின்றனர் எனவும் மக்களவை உறுப்பினர் திருமாவளவன் பேசியுள்ளார். 


நடிகர் விஜய் கடந்த வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளை சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்து, அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் உதவித்தொகை வழங்கினார். அப்போது அங்கு பேசிய நடிகர் விஜய் மாணவர்களைப் நோக்கி, முதல் தலைமுறை வாக்காளர்கள் நீங்கள் தான், சரியான தலைவர்களுக்கு வாக்களித்து புதிய தலைவர்களை நீங்கள் தான் உருவாக்க வேண்டும் என பேசினார். மேலும், காசு வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என உங்கள் பெற்றோர்களிடம் நீங்கள் கூறுங்கள். பாடப்புத்தகங்களை மட்டும் படித்துக்கொண்டு இருக்க வேண்டாம். அம்பேத்கரைப் படியுங்கள், பெரியாரைப் படியுங்கள், காமராசரைப் படியுங்கள் என கூறினார். 


இதனை அன்றைய தினமே திருமாவளவன் வரவேற்றிருந்தார். அப்போது அவர், நடிகர் விஜய் மாநிலம் முழுவதிலும் இருந்து சிறந்த மாண்வர்களை அழைத்து உதவித்தொகை அளித்து ஊக்கப்படுத்தி வருகிறார். இது மாணவர்களிடத்தில் உற்சாகத்தினை ஏற்படுத்தும். மேலும் அவர், அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராசரைப் படிக்கச் சொல்லி இருக்கிறார், நடிகர் விஜயின் கருத்தை வரவேற்கிறேன் என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் நடிகர்கள் நேரடி அரசியலுக்கு வருவது குறித்த மக்களவை உறுப்பினர் திருமாவளவனின் கருத்து குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்தினை கூறி வருகின்றனர். 




Abpnadu டெலிகிராமில் இணைய: https://t.me/s/abpnaduofficial