தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது தான் சட்டமன்ற தேர்தல் முடிந்திருக்கிறது. தமிழ்நாடு மக்களுக்கு இந்த தேர்தல் பெரிய அளவில் சுவாரஸ்யம் தரவில்லை. ஆனால் அதையும் சுவாரஸ்யம் ஆக்கியது, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க விஜயம். யாரும் எதிர்பாராதவிதமாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நடிகர் விஜய் தனது இயக்கத்திற்கு அனுமதி கொடுத்தது. அவரது கட்சி கொடி, இயக்கத்தின் பெயர், தனது போட்டோ என அனைத்தையும் பயன்படுத்தலாம் என பச்சைக் கொடி காட்டியது தான் பாக்கி, உடனே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பு, ஆலோசனை, அறிவுரை என அவரது அலுவலகம் அல்லோகோலப்பட்டது.
5 காரணங்களுக்காக உள்ளாட்சியை தேர்வு செய்த விஜய்!
ஒருவழியாக விஜய்யின் விருப்பம் அவரது ரசிகர்களிடத்தில் சென்று சேர்ந்தது. இப்போது தான் சட்டமன்ற தேர்தல் முடிந்தது. அதில் களமிறங்கியிருக்கலாம். இன்னும் சில ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வரும். பொறுத்திருந்து அதில் களமிறங்கியிருக்கலாம். அதுவும் இல்லையென்றால் இன்னும் 5 ஆண்டுகள் பொறுமை காத்து அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் இந்த மூன்றை விஜய் செய்யாமல், யாரும் எதிர்பாராத உள்ளாட்சி தேர்தலில் அவர் களமிறங்க சில காரணங்கள் இருந்தன.
1.உள்ளாட்சி ஒரு லோக்கல் அமைப்பு. தனது கட்டமைப்பு கிராமங்கள் வரை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிய விஜய் விரும்புகிறார்.
2.உள்ளூர் அளவில் தனக்கான பூத் கமிட்டி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புக்கு தேவையான விசயங்கள் இருக்கிறதா என்பதை அறிய விரும்பினார்.
3.சட்டமன்ற தேர்தலை விட உள்ளாட்சியில் உள்ளூர் செல்வாக்கு மிக்கவர்களே வெற்றி பெறுவர். பணம் அங்கு இரண்டாவது பட்சமே. எனவே நிர்வாகிகளின் செல்வாக்கை அறிய முடிவு செய்தார்.
4.வெற்றி என்பதை கடந்து மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக, தேமுதிக பெறும் ஓட்டுகளை விட கூடுதலாக நமக்கு ஓட்டு கிடைக்கிறதா என்பதை அறிய விரும்புகிறார்.
5.தேர்தலில் இயக்கத்தினர் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை அறிய விருப்பம்
இப்படி 5 காரணங்களுக்கான விடையை அறிய விஜய் விரும்பினார். அதன் வெளிப்பாடு தான் 9 மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்க காரணம் ஆனது.
மனுத்தாக்கல் செய்ய ஆட்கள் இல்லை!
உள்ளாட்சியை பொருத்தவரை ஊராட்சியில் தொடங்கி மாவட்ட ஊராட்சி வரை உறுப்பினர்களுக்கு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. ஊராட்சி வார்டு உறுப்பினர்களை பொறுத்தவரை மிக குறைந்த ஓட்டுகளே இருக்கும். அங்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டி போட ஆர்வம் காட்டுகின்றனர். அங்கு மனுத்தாக்கல் செய்யவும், தேர்தலுக்கான செலவும் மிக மிக குறைவு என்பதால் அதில் அவர்களது ஆர்வம் மேலோங்குகிறது. அதே நேரத்தில் லட்சங்களில் ஏலம் போகும் ஊராட்சி தலைவர் பதவிகளில் போட்டியிட பெரிய அளவில் பண பலம் தேவைப்படுவதால் அங்கிருந்து தான் விஜய் மக்கள் இயக்கம் திணறத் தொடங்குகிறது. ஊராட்சி தலைவருக்கே இந்த நிலை என்றால், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் நிலைமையை சொல்லியத் தேரிய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சில வார்டுகளில் மட்டுமே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதுவும், கடந்த காலங்களில் ஏதாவது ஒரு கட்சியில் போட்டியிட்ட அனுபவமிக்க வேட்பாளர்களை தங்கள் சார்பில் நிறுத்தியுள்ளனர். சில முக்கிய நிர்வாகிகள் நேரடியாக குறைந்தபட்ச இடத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மற்றபடி அனைத்து வார்டுகளிலும் களமிறங்க விஜய் மக்கள் இயக்கத்தில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆள் இல்லை.
என்ன சின்னம்... இதுவரை விடையில்லை!
தேர்தலில் கொடி, இயக்கம், முகம் மட்டும் போதாது. சின்னம் மிக மிக முக்கியம். இதை அரசியல் கட்சிகள் நன்கு புரிந்திருக்கிறார்கள். அதனால் தான் சின்னத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. என்னதால் சுயேட்சையாக போட்டியிட்டாலும், இயக்கம் என்று ஒருங்கிணைக்கும் போது குறைந்தபட்சம் மூன்று சின்னங்களையாவது வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றவாறு கேட்டுப் பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதுவரை எந்த சின்னத்தை பெறுவது என்கிற முடிவுக்கு விஜய் மக்கள் இயக்கம் வரவில்லை. நாம் விசாரித்த வரை அது தொடர்பான புரிதலும் யாருக்கும் இல்லை. இந்த இடத்தில் தான் விஜய் மக்கள் இயக்கம் சறுக்குகிறது. ஒருங்கிணைந்த சின்னத்தை பெறாதவரை அவர்களின் வேட்பாளர்கள் பத்தோடு பதினொன்றாகவே கருதப்படுவர். அரசியல் முடிவு எடுக்க காட்டிய அவசரத்தை, அதன் பின் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகளில் விஜய் காட்டவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஒருவேளை அதுமாதிரியான முன்னெடுப்புகளை எடுத்திருந்தால், கட்டாயம் மனுத்தாக்கலுக்கு இன்னும் பலர் முன்வந்திருப்பார்கள்.
பார்க்கலாம் இன்னும் காலம் இருக்கிறது... விஜய் என்ன முடிவு எடுக்கப்போகிறார்... விஜய் மக்கள் இயக்கம் என்னவாகப்போகிறது என்று!