தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.


ட்ரெய்லர் ஒருபக்கம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தாலும் விஜய்க்கு தலைவலியையும் கொடுத்துள்ளது. பீஸ்ட் ட்ரெய்லரில் ஒரு பேனரை கத்தியை வைத்து விஜய் கிழிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அது காவி கலர் என்பதை சுட்டிக்காட்டி பலரும் குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக பதிவிட்டு வந்தனர். இதுதான் விஜய்யின் அறிக்கைக்கே காரணம் எனக் கூறப்படுகிறது.


என்ன அறிக்கை? 


விஜய் சார்பில் தற்போது அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சி தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக்கூடாது. இது நம் தளபதி விஜய் அவர்களின், கடுமையான உத்தரவின் பேரில், ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம்.


அதனை மீறுவோர் மீது, நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம். இருப்பினும், நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டது.






அடுத்தடுத்து சம்பவங்கள்..


இந்த அறிக்கைக்கு முக்கிய காரணமே விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் போட்ட பல பதிவுகள்தான் என சிலர் குறிப்பிட்டுள்ளனர். ட்ரெய்லர் பேனர் விவகாரம் மட்டுமின்றி நேற்று முதல்வர் ஸ்டாலினும், விஜயும் நேருக்கு நேராக சந்தித்து பரஸ்பர மரியாதை செலுத்திக் கொண்டனர். புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலானது. ’தளபதியும் தளபதியும் சந்திப்பு’ என பலரும் அதனை பதிவிட்டு கொண்டாடிய நிலையில் சிலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பை மேற்கோள் காட்டி கிண்டல் பதிவுகளையும், அரசியல் நோக்க பதிவுகளையும் சோஷியல் மீடியாவில் பதிவு செய்தனர். இது விஜய் தரப்பு பார்வைக்கு சென்றதாகவும், அதனால்தான் உடனடியாக அறிக்கை பறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் விஜயின் பீஸ்ட்  படம் அடுத்த வாரம் வெளியவரவுள்ள சூழலில் சக நடிகர்களை கிண்டல் செய்தும், மீம்ஸ்கள் பதிவிட்டும் இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவும் இந்த அறிக்கையை சிலர் பார்க்கின்றனர்.