தமிழ் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாத இரட்டை குதிரைகள். சிலர் நேரடியாக அரசியலுக்கு வருகிறார்கள். சிலர் திடீரென அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். சிலர், ‛வருவேன்... வருவேன்...’ என்று கூறி, கடைசி வரை வராமலும் கூட இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள் வரிசையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது ஆச்சரியமில்லை. ஏனென்றால், அவர் கட்டாயம் அரசியலுக்கு வருவார் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.


விஜய்யின் அடிப்படை சினிமா காலமே, அதற்காக கட்டமைக்கப்பட்டது தான். பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் விஜய், இன்னும் அரசியலுக்கு நேரடியாக வராமல் இருப்பதே பெரிய ஆச்சரியம் தான்; காரணம், அவர் அதற்கான பணிகளை எப்போதோ தொடங்கிவிட்டார். ரசிகர் மன்றம், மக்கள் இயக்கமாக மாறியதிலிருந்தே விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடங்கிவிட்டது. ஜெயலலிதா-கருணாநிதி என்கிற ஆளுமைகள் இல்லாத நேரத்தில் களமிறங்க நினைத்தவருக்கு, மத்திய அரசு வழியாக சில இடையூறுகள் இருந்து கொண்டே இருந்தது. குறிப்பாக, ரெய்டுகள் தொடர்ந்ததால், விஜய் கொஞ்சம் பொறுமை காத்தார். 




 சினிமாவிலும், மேடைகளிலும் மறைமுக அரசியல் பேசி வந்த விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில், சைக்கிளில் வாக்களிக்க வந்து, நிஜ அரசியலை பேசாமல் பேசி சென்றார். அது பெரிய அளவில் எதிரொலிக்கவும் செய்தது. அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உள்ளாட்சி தேர்தல் வந்தது. அப்போது தான், விஜய் தனது அரசியல் பிரவேசத்திற்கான முதல் அடியை அதிகாரப்பூர்வமாக எடுத்து வைத்தார் .


தனது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை தேர்தலில் போட்டியிடச் செய்ய அனுமதியளித்தார். தனது பெயர், இயக்கத்தின் பெயர், இயக்க கொடியை பயன்படுத்தவும் அனுமதித்தார். ‛விஜய் வந்துவிட்டார்...’ என்பது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால், விஜய் அதையும், ஆழம் பார்க்கவே செய்தார். தனக்கான அரசியல் அடிப்படை எந்தஅளவிற்கு இருக்கிறது என்பதை அறியவே விஜய் உள்ளாட்சியில் தன் ரசிகர்களை களமிறக்கினார். அந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் , யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றனர். இதை விஜய் கூட எதிர்பார்க்கவில்லை.




அதன் பிறகு, நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய், தனது பலத்தை நிரூபிக்க களமிறங்கினார். பெரிய அளவில் வெற்றி இல்லை என்றால், பல நாள் களத்தில் இருக்கும் கட்சிகளை விட அதிக ஓட்டுகளை விஜய் மக்கள் இயக்கம் பெற்றது. சில இடங்களில் வெற்றியும் கிடைத்தது. இப்போது விஜய்க்கு... முழு நம்பிக்கை உண்டானது. பிரச்சாரம் செய்யாமல், பணம் செலவழிக்காமல், தனது இயக்கத்தினரால் மக்களை சந்திக்க முடிகிறது என்கிற நம்பிக்கை விஜய்க்கு ஏற்பட்டது. இனி தேர்தலை களம் காண்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை விஜய் உணர்ந்துவிட்டார்.




2024ல் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலில் , முழுநேர அரசியல் பிரவேசத்தை தொடங்கலாம் என விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகளில் தீவிரமாக களமாடிக் கொண்டிருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். ஏப்ரம் 6 ம் தேதி கல்பாத்தி இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். மே 18 நேற்று, தெலங்கான முதல்வர் சந்திரசேகரராவை சந்தித்தார். 


புதுச்சேரி, தமிழ்நாடு, தெலங்கான இந்த மூன்று மாநிலங்களும் அருகருகில் உள்ள அண்டைமாநிலங்கள். புதுச்சேரி அரசியல் கொஞ்சம் மாறுப்பட்டது; மத்திய அரசியலை அறிய அது தான் சரியான களம் என்பதால், விஜய்யின் முதல் சாய்ஸ், புதுச்சேரி. அடுத்தது தமிழ்நாடு; இங்குள்ள அரசியலை விஜய் நன்கு அறிவார். ஆனாலும், ஸ்டாலினுடான சந்திப்பை அவர் அதிகாரப்பூர்வமாக இல்லாமல், அதே நேரத்தில் எதார்த்தமானதாகவும் மாற்ற நினைத்தார். ஒரு நிகழ்ச்சியில், விஐபி.,கள் சந்திப்பு ‛ஃபுரொட்டகால்’ இருக்கும். அதிலும் முதல்வர் வரும் போது, கட்டாயம் இருக்கும். முதல்வர் பங்கேற்கும் முன் விஜய் வந்ததும், விஜய் வந்த பின் முதல்வர் வந்ததும், எதிர்பாராத விதமாக நடந்ததாக தெரியவில்லை. குறைந்தபட்சம் விஜய்க்கு அது தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி தான் அந்த சந்திப்பு நடந்தது. அங்கு அரசியல் பேசும் அளவிற்கு நேரம் இருந்திருக்குமா என்றால்... கட்டாயம் இல்லை. ஆனால், அந்த சந்திப்பே அரசியல் ஆகும் என்பதை விஜய் அறிந்திருப்பார். 




அடுத்தது தெலங்கானா... களத்தில் தற்போது நேரடியாக பாஜகவை எதிர்த்துக் கொண்டிருக்கும் சந்திரசேகராரவை, விஜய் சந்தித்திருப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இத்தோடு நிற்கப்போவதில்லை, விரைவில் கேரள முதல்வர் பிரனாய் உடனும் சந்திப்பு இருக்கும் என்கிறார்கள். புதுவையை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் முதல்வர்களே உள்ளனர். புதுவையில் பாஜக ஆதரவு பெறற அரசு என்றாலும், அவர்களால் அழுத்தத்தை சந்திக்கும் அரசு என்பதால் அவர்களின் கருத்துக்களும் விஜய்க்கு தேவைப்பட்டது. அப்படி தான், அவர் ரங்கசாமியை சந்தித்தார். 4 மாதத்தில், 3 முதல்வர்களை சந்தித்திருக்கும் விஜய், 2024 தேர்தலுக்கான பணியை முதல்வர்களிடமிருந்து தொடங்கியிருக்கிறார். 


லோக்சபா தேர்தலில் போட்டியிடும் போது, ஆளும் கட்சிக்கு எதிராகவே களமாட வேண்டியிருக்கும். அப்படி பார்க்கும் போது, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய, இன்னும் அனுபவம் தேவை என்பதால், இப்போதே அதற்காக முழுவீச்சில் இறங்கிவிட்டார் விஜய். ஒருபுறம் சினிமா; மற்றொருபுறம் அரசியல் என , ஒரே கல்லில் இரு மாங்காயை அடித்துக் கொண்டிருக்கும் விஜய், 2024ல் மாங்கனியை சுவைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.