தமிழகத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் இருந்து வரும் நிலையில், தற்போது மேலுமொரு புதிய கட்சி ஒன்று தொடங்கப்படுகிறது. இக்கட்சிக்கு அறவோர் முன்னேற்றக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் சுருக்கமாக AMK என அழைக்கப்படவுள்ளது. இக்கட்சிப் பெயர், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான பதிவு சான்றிதழும் கிடைத்திருப்பதாக பிரபல நடிகரும்  அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். 


சில வாரங்களுக்கு முன், நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர், ABP நாடு-வுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிராமணர்களுக்கென்று விரைவில் தனியாக கட்சி தொடங்கப்படும் என்றும் அக்கட்சி அச்சமூகத்தினரை ஒன்றிணைப்பதுடன், அவர்களின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தார். அந்த வகையில், இது தொடர்பாக, தற்போது தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், புதிய கட்சியின் பெயர் அறவோர் முன்னேற்ற கழகம் என்றும் இக்கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் அனுமதியும் கிடைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கட்சி, பிராமணர்களுக்கான கட்சியாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் பேசுகையில், பொதுவாக, வன்னியர் சமூகத்திற்காக டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, முதலியார் சமூகத்திற்காக ஏசி சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சி, யாதவர் சமூகத்திற்காக தேவநாதன் தலைமையிலான கட்சி போல பல கட்சிகள் இருப்பதாக பொதுவாக கூறப்படுகிறது. அதுபோல்,  பிராமண சமூகத்திற்கென தனியாக கட்சி ஏதுமில்லை என்பதால், தற்போது அறவோர் முன்னேற்றக் கழகம் தொடங்கப்படுகிறது எனத் தெரிவித்தார். 


ஏற்கெனவே, ABP நாடு-வுக்கு அளித்த பேட்டியின்போது, பல்வேறு கட்சிகளில் குறிப்பாக, ”பாஜகவில் பிராமணர்கள் ஒதுக்கப்படுவதால், அவர்களுக்கான கோரிக்கைகள் சட்டமன்றம் உள்ளிட்ட மக்கள் மன்றங்களில் எழுப்பப்படுவதில்லை” எனத் தெரிவித்து இருந்தார். எனவேதான், கடந்த சில ஆண்டுகளாக, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு,  தற்போது அதிகாரப்பூர்வமாக, பிராமணர்களுக்காக அறவோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கப்படுவதாகவும், இதற்கான தொடக்க விழா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆகியோர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எஸ்.வி. சேகர் தற்போது தொலைக்காட்சி பேட்டியின்போது தெரிவித்துள்ளார். 


பாஜகவில் தாம் உறுப்பினராக உள்ளதாக கூறும் எஸ்.வி.சேகருக்கும், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே அண்மைக்காலமாக வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. ”யாரையும் மதிக்கத் தெரிவதில்லை” என வெளிப்படையாகவே, அண்ணாமலையை குற்றம்சாட்டி வந்தார் எஸ்.வி.சேகர். ”யாரையும் வீடு தேடிச் சென்று மரியாதை செய்ய வேண்டிய அவசியம் தமக்கில்லை” என அண்ணாமலையும் பதிலடி தந்திருந்தார். இந்தச் சூழலில்தான், தற்போது ஏஎம்கே என்ற கட்சி தொடங்கப்படுவதாக எஸ்.வி. சேகர் அறிவித்துள்ளார். 


”AMK எனும் அறவோர் முன்னேற்றக் கழகம் தொடர்பான மற்ற விஷயங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும், வரப்போகின்ற தேர்தல்களில், வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் இக்கட்சியின் பங்கு இருக்கும்” என்று எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்தில் அனுமதிப் பெற்று பதிவு செய்யப்பட்ட ஏகப்பட்ட கட்சிகள் இருக்கும் சூழலில், தற்போது மேலுமொரு கட்சி, அதுவும் சாதிக்கட்சி என்ற அடையாளத்தில் வரும் அறவோர் முன்னேற்றக் கழகம் எனும் AMK என்ற கட்சி பெரிய அளவில் எடுபடுமா? அல்லது வந்த வேகத்திலேயே காணாமல் போகுமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்..